ADDED : நவ 15, 2026 07:09 PM
ஊத்துக்கோட்டை: அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று லாரிகள், இன்று (நவ.,15) பறிமுதல் செய்யப்பட்டன.
தச்சூர் – சித்துார் இடையே, ஆறுவழிச் சாலைப்பணி நடந்து வருகிறது. இதில், போந்தவாக்கம் – தச்சூர் இடையேயான பணிகள், தற்போது நடந்து வருகின்றன. இதற்காக, ஆந்திராவின் பல பகுதிகளில் இருந்து, மணல் எடுத்து வரப்படுகிறது.
இதில், சிலர் திருட்டுத்தனமாக மணல் கடத்தி வருவதாக, கனிம வளத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இன்று விடியற்காலை, போந்தவாக்கம் பகுதியில், கனிம வளத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த மூன்று லாரிகளை சோதனை செய்ததில், ஆவணங்கள் ஏதுமின்றி, கள்ளத்தனமாக மணல் கடத்தி வந்தது தெரிந்தது.
இச்சம்பவத்தில், லாரி ஓட்டுநர்கள் தப்பினர். பிடிபட்ட மூன்று லாரிகளை கைப்பற்றிய அதிகாரிகள், பென்னலுார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து, பென்னலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்களை தேடி வருகின்றனர்.
