/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதல்
/
அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதல்
ADDED : டிச 05, 2024 11:23 PM

திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் குறித்தான ஆய்வுக் கூட்டம், கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நேற்று நடந்தது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள எஸ்.பி., காவல் துறை துணை ஆணையர், உதவி ஆணையர்கள், அனைத்து கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் காவல் துறையினர் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற திருத்தணி கோட்டாட்சியர் தீபாவை, ஆய்வுக் கூட்டம் முடிந்த பின், திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக, கோட்டாட்சியர் வாகனம் திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், சென் னை - திருப்பதி நெடுஞ்சாலையில் பூந்தமல்லி டாஸ்மாக் வட்டாட்சியர் குமார், தன் சொந்த 'இனாவோ' காரில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது, திருப்பாச்சூர் கூட்டுச்சாலை அருகே வந்தபோது திடீரென கார் ஒன்று குறுக்கே வரவே, வட்டாட்சியர் காரை திடீரென நிறுத்தினார்.
இதை சற்றும் எதிர்பாராத, திருத்தணி கோட்டாட்சியரை அழைத்து செல்ல வந்த, 'மஹிந்திரா' வாகனம், வட்டாட்சியரின் இனாவோ காரின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.
இதையடுத்து, கோட்டாட்சியர் வாகனத்தின் பின்னால் வந்த கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த மினி லாரியும், கோட்டாட்சியர் வாகனத்தின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை; வாகனங்கள் மட்டுமே சேதம் அடைந்தன.
தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.