மாணவர்களை நோயாளியாக்கும் திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் குப்பை எரிப்பால் மூச்சுத் திணறல் பாதிப்பு
மாணவர்களை நோயாளியாக்கும் திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் குப்பை எரிப்பால் மூச்சுத் திணறல் பாதிப்பு
ADDED : மார் 05, 2026 05:44 AM

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி அலட்சியத்தால், பள்ளி அருகில் பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகள், தலக்காஞ்சேரி குப்பை கிடங்கில் எரிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் புகையால், பள்ளி மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், தினமும் மட்கும், மட்காதவை என, 35 டன் குப்பை கழிவுகள் சேருகிறது. இதை தனியார் துப்புரவு ஊழியர்கள் வீடுதோறும் சென்று பெற்று வருகின்றனர். கடந்த காலங்களில், தலக்காஞ்சேரியில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டது. அங்கு, குப்பை கழிவுகள் மலைபோல் தேங்கியது.
மாற்று ஏற்பாடாக, கடம்பத்துார் ஒன்றியம் நுங்கம்பாக்கம் கிராமத்தில், 4.7 ஏக்கர் நிலத்தில், குப்பைகளை உரமாக மாற்றும் திட்டம் துவங்கப்பட்டது. இருப்பினும், தெருக்களில் சேகரமாகும் குப்பைகளை, தனியார் ஊழியர்கள் தொடர்ந்து தலக்காஞ்சேரியில் கொட்டி, அவ்வப்போது தீ வைத்து எரித்து வருகின்றனர்.
இதன் காரணமாக, அப்பகுதியில் புகை மண்டலம் ஏற்பட்டு, குடியிருப்பு மக்களுக்கும், அங்குள்ள நகராட்சி மற்றும் தனியார் பள்ளி மாணவ - மாணவியருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருகிறது.
பள்ளி மாணவ - மாணவியர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே காரணம் என, பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்து, குப்பைகள் எரிப்பதை தடுத்து, 'பயோமைனிங்' முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
