/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாணவர்களுக்கு தயாராகி வரும் திருவள்ளூர் நகராட்சி பள்ளி
/
மாணவர்களுக்கு தயாராகி வரும் திருவள்ளூர் நகராட்சி பள்ளி
மாணவர்களுக்கு தயாராகி வரும் திருவள்ளூர் நகராட்சி பள்ளி
மாணவர்களுக்கு தயாராகி வரும் திருவள்ளூர் நகராட்சி பள்ளி
ADDED : ஏப் 17, 2025 01:43 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில் நான்கு துவக்க பள்ளி, மூன்று நடுநிலை பள்ளி, ஒரு உயர்நிலை மற்றும் இரண்டு மேல்நிலை பள்ளி என, மொத்தம் 10 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு, 2,500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
இதில், ராஜாஜி சாலையில் உள்ள வளாகத்தில் துவக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியில், 900க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். இதே வளாகத்தில், சத்துணவு மையம் மற்றும் அங்கன்வாடியும் உள்ளது.
மிகவும் குறுகலான இடத்தில் மூன்று பள்ளிகள் மற்றும் ஒரு சத்துணவு மையம் இயங்கி வருவதால், மாணவ - மாணவியர் வகுப்பறையில் நெருக்கமாக அமர்ந்து பயின்று வந்தனர். மேல்நிலை பள்ளி மாணவ - மாணவியருக்கு, மாடியில் கூரை அமைத்தும் போதுமானதாக இல்லை.
இதையடுத்து, புதிய பள்ளி கட்டடம் கட்டுவதற்காக, கடந்த 2023ல் தாலுகா அலுவலகம் அருகே, ஆக்கிரமிப்பில் இருந்த 50 சென்ட் அரசு நிலம் மீட்கப்பட்டது. அந்த இடத்தில், புதிய நகராட்சி மேல்நிலை பள்ளி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து நகராட்சி தலைவர் உதயமலர் கூறியதாவது:
ராஜாஜி சாலை மற்றும் சத்தியமூர்த்தி தெருவில் இரண்டு மேல்நிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அப்பள்ளிகள் குறுகிய இடத்தில் அமைந்துள்ளதால், ஜே.என்.சாலையில், திருவள்ளூர் தாலுகா அலுவலகம் அருகே, 50 சென்ட் இடத்தில் தரை, முதல் மற்றும் இரண்டாம் தளம் என, மூன்று அடுக்கு கட்டடம், 6 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
புதிதாக அமையவுள்ள பள்ளியில் மாணவ - மாணவியருக்கு விசாலமான வகுப்பறை, ஆய்வகம், நுாலகம் மற்றும் விளையாட்டு திடல் ஆகிய வசதிகள் இடம்பெறும். மூன்று மாதத்திற்குள் பணி முடிக்க முடிவு செய்யப்பட்டு, கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.