/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சேதமான 175 சாலைகளை சீரமைக்க...ரூ.22 கோடி!:அரசுக்கு திருத்தணி நகராட்சி பரிந்துரை
/
சேதமான 175 சாலைகளை சீரமைக்க...ரூ.22 கோடி!:அரசுக்கு திருத்தணி நகராட்சி பரிந்துரை
சேதமான 175 சாலைகளை சீரமைக்க...ரூ.22 கோடி!:அரசுக்கு திருத்தணி நகராட்சி பரிந்துரை
சேதமான 175 சாலைகளை சீரமைக்க...ரூ.22 கோடி!:அரசுக்கு திருத்தணி நகராட்சி பரிந்துரை
ADDED : ஆக 09, 2024 01:13 AM

திருத்தணி: 'திருத்தணியில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக சேதப்படுத்திய 175 சாலைகளை சீரமைப்பதற்கு, 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என, நகராட்சி நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில் மொத்தம் 523 தெருக்கள் உள்ளன. இங்கு, 14,000 குடும்பத்தினர் வசிக்கின்றனர்; 2,000த்திற்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன.
நகராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக, குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக திருப்பாற்கடல் பகுதியில் இருந்து திருத்தணி நகருக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வருவதற்கு, கடந்த 2019ல் 110 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆய்வு
இதையடுத்து குடிநீர் வாரியம், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக திருத்தணி நகரத்தில், 21 வார்டுகளில் கூட்டுக்குடிநீர் கொண்டு செல்வதற்கு ராட்சத குழாய்கள் மற்றும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு, நகராட்சி சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை சேதப்படுத்தி குழாய்கள் அமைக்கப்பட்டன.
இதனால், நகராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக மாறியுள்ளன; வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருவதுடன் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஆனால், கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் முழுமையாக முடியாததால் சாலைகளை சீரமைக்கவில்லை.
தற்போது கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் குழாய்கள் புதைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதால், நகராட்சி நிர்வாகம் சேதம் அடைந்த சாலைகள் விபரத்தை சேகரித்து வருகிறது.
அந்த வகையில், முதற்கட்டமாக 175 சாலைகளை ஆய்வு செய்து அவற்றை சீரமைப்பதற்கு, 22 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என நிர்வாகம், நகராட்சிகளின் இயக்குனர் அலுவலகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
ஆறு மாதங்கள்
திருத்தணி நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
நகராட்சியில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் முழுமையாக முடிந்த சாலைகளை மட்டும் சீரமைக்க முடியும்.
குடிநீர் வடிகால் வாரியம், 175 சாலைகளில் குடிநீர் திட்டப்பணிகள் முழுமையாக முடிந்துள்ளதாக சான்று வழங்கி உள்ளது.
அந்த சாலைகளை முதற்கட்டமாக சீரமைப்பதற்கு, 22 கோடி ரூபாய் தேவை என தயார் செய்து அரசுக்கு அனுப்பிஉள்ளோம்.
நிதியுதவி மற்றும் அரசாணை கிடைத்ததும், பணிகளுக்கு டெண்டர் விட்டு, ஆறு மாதங்களுக்குள் சாலைகள் சீரமைக்கப்படும். மீதமுள்ள சாலைகள் படிப்படியாக நிதியுதவி பெற்று சீரமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.