/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் தயக்கம் வாடகை, வைப்பு தொகை குறைக்க நகராட்சி முடிவு
/
கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் தயக்கம் வாடகை, வைப்பு தொகை குறைக்க நகராட்சி முடிவு
கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் தயக்கம் வாடகை, வைப்பு தொகை குறைக்க நகராட்சி முடிவு
கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் தயக்கம் வாடகை, வைப்பு தொகை குறைக்க நகராட்சி முடிவு
ADDED : நவ 12, 2025 10:23 PM

திருவள்ளூர்: திருவள்ளூர் நேதாஜி சாலையில் புதிதாக கட்டப்பட்ட கடைகளை யாரும் ஒப்பந்தம் கோராததால், வாடகை, வைப்பு தொகையை குறைக்க, நகராட்சி முடிவு செய்துள்ளது.
திருவள்ளூர் நகராட்சி சார்பில், வி.நாயுடு சாலை - நேதாஜி சாலை சந்திப்பில், 80 லட்சம் ரூபாய் மதிப்பில், 19 கடைகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டது.
கடை ஒன்றுக்கு, மாத வாடகை 10,000 ரூபாய், ஓராண்டு வைப்பு தொகையாக 1 லட்சம், சொத்து மதிப்பு சான்று 2 லட்சம் ரூபாய் எனவும், சொத்து மதிப்பு சான்று இல்லாதோர் கூடுதலாக, 1 லட்சம் ரூபாய் வைப்பு தொகை செலுத்த வேண்டும் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டது.
இக்கடைகளுக்கு, கடந்த மே 29, ஜூன் 24, ஜூலை 16 ஆகிய நாட்களில், மூன்று முறை ஏலம் விடப்பட்டும், ஒருவர் கூட கடையை எடுக்க விண்ணப்பிக்கவில்லை. இதனால், ஆறு மாதங்களாக கடைகள் பூட்டிக் கிடப்பதால், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:
திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம், கடைகளுக்கு வாடகை மற்றும் வைப்பு தொகையை, தனியாருக்கு இணையாக நிர்ணயித்துள்ளது. அவர்கள் நிர்ணயித்துள்ள வாடகைக்கு, வியாபாரம் இருக்காது. மேலும், லாபமும் கிடைக்காது என்பதால், ஏலத்திற்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை.
எனவே, வாடகை அல்லது வைப்பு தொகையை குறைக்க நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, நகராட்சி தலைவர் உதயமலர் கூறியதாவது:
நேதாஜி சாலை சந்திப்பில், 19 கடைகள் வாகன நிறுத்தத்துடன் கட்டப்பட்டு உள்ளது. நான்கு முறை ஏலம் விடப்பட்டு, கடைகள் கோரி யாரும் விண்ணப்பிக்கவில்லை. விண்ணப்பித்த ஒருவரும் வாடகை மற்றும் வைப்பு தொகை அதிகம் என்பதால், அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரினார்.
இதையடுத்து, அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்தும், வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, வாடகை மற்றும் வைப்பு தொகையை குறைக்க, கவுன்சிலர் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
அந்த தீர்மானத்தை, தமிழக அரசுக்கு அனுப்பி வைத்து, வாடகை மற்றும் வைப்பு தொகையை குறைக்க, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்ததும், குறைக்கப்பட்ட வாடகை மற்றும் வைப்பு தொகையுடன், மறு ஏலம் விரைவில் விடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

