ADDED : மார் 04, 2024 06:41 AM
சென்னை: பிரதமர் மோடி வருகையை ஒட்டி, தாமரை மாநாடு நடக்கும் இடங்களைச் சுற்றி சில பகுதிகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், இன்று மாலை, 5:00 மணிக்கு, பா.ஜ., சார்பில், தாமரை மாநாடு நடக்கிறது. இதில், பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
அதனால், 'தாமரை மாநாடு' நடக்கும் இடத்தை சுற்றியுள்ள சாலைகள், அண்ணா சாலையில், ஒய்.எம்.சி.ஏ., நந்தனம் - அண்ணா மேம்பாலம் வரை, மதியம், 12:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது என்பதை வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்வது நல்லது.
அண்ணா சாலை, சர்தார் வல்லபாய் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, ஜி.எஸ்.டி., சாலை, பரங்கிமலை - பூந்தமல்லி சாலை, 100 அடி சாலை வரை, போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட வாய்ப்பு அதிகம். இதனால், வாகன ஓட்டிகள், மாற்றுப்பாதையை தேர்வு செய்ய வேண்டும்.
மதியம், 12:00 மணியில் இருந்து, இரவு 8:00 மணி வரை, மத்திய கைலாஷ் முதல் ஹால்டா சிக்னல் வரை, இந்திரா காந்தி சாலை பல்லாவரம் முதல் கத்திப்பாரா சிக்னல் வரை வணிக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
பரங்கிமலை - பூந்தமல்லி சாலையில், ராமாபுரம் முதல் கத்திப்பாரா சிக்னல் வரை, அசோக் பில்லர் முதல் கத்திப்பாரா சிக்னல் வரை, விஜயநகர் சிக்னல் முதல் கிண்டி கான்கார்ட் சிக்னல் வரையிலும், வணிக வாகனங்கள் செல்லக்கூடாது.
அண்ணாதுரை சிலை முதல் பரங்கிமலை சாலை, தேனாம்பேட்டை நந்தனம் காந்தி மண்டபம் சாலை வரை வணிக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக, காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
