UPDATED : அக் 10, 2026 05:41 PM
ADDED : அக் 10, 2026 05:36 PM

கும்மிடிப்பூண்டி: பல்வேறு வழக்குகள் தொடர்பாக போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையில் நிறுத்தப்படுவது, போக்குவரத்திற்கு இடையூறாக மாறி உள்ளது.
சென்னை –- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம், தச்சூர் பகுதியில், கவரைப்பேட்டை காவல் நிலையம் இயங்கி வருகிறது.
கவரைப்பேட்டை போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், காவல் நிலையம் எதிரே, தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையில் வரிசையாக நிறுத்தப்படுகின்றன.
ஆந்திராவில் இருந்து பொன்னேரி வழியாக மணலி, எண்ணுார் துறைமுகங்களுக்கு செல்லும் கன்டெய்னர்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், இந்த இணைப்பு சாலை வழியாக சென்று வருகின்றன.
பறிமுதல் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடம் குறுகி உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறாக மாறி உள்ளது. கனரக வாகனங்கள் அப்பகுதியை கடக்க முடியாமல் திணறுகின்றன. இதனால், விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது.
எனவே, தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களை அப்புறப்படுத்தி, காவல் நிலையத்தை சுற்றியுள்ள காலி இடங்களில் நிறுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
