/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் கூட்டு குடிநீர் திட்டம் சோதனை ஓட்டம்... துவக்கம்! : ஜன.,15க்கு பின் அனைத்து வீடுகளுக்கும் சப்ளை
/
திருத்தணியில் கூட்டு குடிநீர் திட்டம் சோதனை ஓட்டம்... துவக்கம்! : ஜன.,15க்கு பின் அனைத்து வீடுகளுக்கும் சப்ளை
திருத்தணியில் கூட்டு குடிநீர் திட்டம் சோதனை ஓட்டம்... துவக்கம்! : ஜன.,15க்கு பின் அனைத்து வீடுகளுக்கும் சப்ளை
திருத்தணியில் கூட்டு குடிநீர் திட்டம் சோதனை ஓட்டம்... துவக்கம்! : ஜன.,15க்கு பின் அனைத்து வீடுகளுக்கும் சப்ளை
ADDED : ஜன 02, 2024 09:28 PM

திருத்தணி:திருத்தணி நகராட்சியில், 110 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் துவங்கி, மூன்று ஆண்டுகளுக்கு பின், தற்போது அனைத்து தெருக்களில் உள்ள குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகித்து சோதனை ஓட்டம் துவங்கியுள்ளது.
பொங்கல் பண்டிகை கழித்து, நகராட்சியில் குடிநீர் இணைப்பு பெற்றுள்ள அனைத்து வீடுகளுக்கும், ஆறு மாதம் வரை குடிநீர் வினியோகம் செய்து சோதனை ஓட்டம் நடத்தப்படும் என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 14,000 குடும்பத்தில், 50,000 பேர் உள்ளனர். ஒரு நபருக்கு , 90 லிட்டர் குடிநீர் வீதம், 45 லட்சம் லிட்டர் குடிநீர் தினமும் நகராட்சிக்கு தேவைப்படுகிறது.
மூன்று கிணறுகள்
தற்போது அரக்கோணம் கூட்டு குடிநீர் திட்டம், அருங்குளம் கொற்றலை ஆற்றில் மூன்று கிணறுகள் மற்றும் நகராட்சியில் போடப்பட்டுள்ள, 30 ஆழ்துளை கிணறுகளில் இருந்து தினமும் 20 முதல் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே பெறப்படுகிறது.
இதனால், மழை காலங்களில் மூன்று நாட்களுக்கு ஒரு முறையும், கோடை காலத்தில் வாரத்திற்கு ஒரு முறையும் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்து வந்தது.
இதனால் நகராட்சியில் குடிநீர் தட்டுபாடு பல ஆண்டுகளாக நிலவியது. இந்நிலையில், கடந்த, 2020ம் ஆண்டு திருப்பாற்கடலில் இருந்து திருத்தணி நகருக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் வழங்குவதற்கு, 110 கோடி ரூபாய் மதிப்பில் குழாய்கள் புதைக்கும் பணிகள் துவங்கின.
கூட்டுக் குடிநீர் சேமிக்க, திருத்தணி சேகர்வர்மா நகரில், 3.60 லட்சம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் தேக்கும் நீர்ஊந்து நிலையம், இந்திரா நகர் பகுதியில், 10.40 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டும் பணி கடந்தாண்டு மார்ச் மாதம் முடிந்தது.
ராட்சத குழாய்
மேலும் திருப்பாற்கடலில் இருந்து திருத்தணி நகருக்கு ராட்சத குழாய் கள் அமைக்கும் பணிகள் முழுமையாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முடிந்தன.
ஆனால், நகராட்சி, 21 வார்டுகளிலும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை ஆமை வேகத்தில் நடத்தியது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் குடிநீர் இணைப்பு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியது.
இதன் பலனாக கடந்த, 10 நாட்களுக்கு முன் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள், 95 சதவீதம் முடிந்துள்ளன. தற்போது, குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்து சோதனை ஓட்டம் துவங்கியுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நகராட்சியில், 10,315 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும். இதுவரை, 9,675 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகள் மலைப்பகுதியில் உள்ளதால் நகராட்சி நிர்வாகமே, இரும்பு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கிறோம் என கூறியுள்ளனர்.
சோதனை ஓட்டம்
திருப்பாற்கடலில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம், திருத்தணி சேகர் நகர் தரைமட்ட தொட்டிக்கு தண்ணீர் விடப்படுகிறது.
அங்கிருந்து நான்கு ராட்சத மின்மோட்டார் மூலம், இந்திரா நகர் மற்றும் அக்கைய்யநாயுடு சாலை தொலைபேசி அலுவலகம் பின்புறத்தில் உள்ள நகராட்சி குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்படுகிறது.
பின், அந்த தொட்டிகளில் இருந்து வழக்கமாக நகராட்சிக்கு புதைக்கப்பட்ட குடிநீர் குழாய் மூலம் தற்போது தண்ணீர் விட்டு சோதனை ஓட்டம் துவங்கியுள்ளோம். இதில் குழாய் உடைப்பு மற்றும் தண்ணீர் கசிவு போன்றவை கண்டறித்து சீரமைத்து வருகிறோம்.
பொங்கல் பண்டிகைக்கு பின், நாங்கள் குடிநீர் இணைப்பு வழங்கியுள்ள அனைத்து வீடுகளுக்கும், ஆறு மாதம் வரை இலவசமாக குடிநீர் விட்டு சோதனை ஓட்டம் நடத்தவும் திட்டுமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நகராட்சியில், வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் என மொத்தம், 12, 900 குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என பட்டியல் தயாரித்து குடிநீர் வடிகால்வாரியத்திடம் ஒப்படைத்தோம். தற்போது, 9,000 குடிநீர் இணைப்புகள் தான் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வாய்மொழியாக கூறியுள்ளனர். ஆனால் குடிநீர் சோதனை ஓட்டம் துவங்கி உள்ளனர். குடிநீர் வாரியம் ஆமை வேகத்தில் தான் செயல்படுகிறது.
- - நா. அருள், ஆணையர், திருத்தணி நகராட்சி.