/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் கவிழ்ந்த லாரி போக்குவரத்து பாதிப்பு
/
சாலையில் கவிழ்ந்த லாரி போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 26, 2024 01:47 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில் நெல் மூட்டைகள் ஏற்றி சென்ற லாரி, பாரம் தாங்காமல் தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையில் இருந்து செங்குன்றம் பகுதிக்கு, நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, 14 டயர் கொண்ட லாரி நேற்று அதிகாலை சென்றுக்கொண்டிருந்தது. லாரியை, ஆந்திர மாநிலம், வாக்காடு பகுதியை சேர்ந்த வெங்கி, 24, என்பவர் ஓட்டி சென்றார்.
கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் எதிரே உள்ள சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தின் மீது சென்றபோது, பாரம் தாங்காமல், சாலையின் குறுக்கே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
லாரி டிரைவருக்கு இடது காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சாலையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்தபடி லாரி கவிழ்ந்ததால், அதிகாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சென்ற நெடுஞ்சாலை ரோந்து போலீசார், சாலையின் குறுக்கே தடுப்பு அமைத்து, குறுகிய வழியில் ஒவ்வொரு வாகனங்களாக கடந்து செல்ல அனுமதித்தனர்.
லாரி ஒன்று வரவழைத்து, நெல் மூட்டைகளை அதில் மாற்றப்பட்டன. பின்னர் கவிழ்ந்த லாரியை கிரேன் வாயிலாக அப்புறப்படுத்தினர். தேசிய நெடுஞ்சாலையில் லாரி கவிழ்ந்த விபத்தால் கும்மிடிப்பூண்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.