ADDED : டிச 08, 2024 08:45 PM
பொன்னேரி:பொன்னேரி - பழவேற்காடு சாலையில் உள்ள திருப்பாலைவனம் பஜாரில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, 'டிவிஎஸ் எக்ஸ்எல்' பைக்கில் சென்றவரை மடக்கி சோதனையிட்டபோது, அதில் பிஸ்கட் பொருட்களுக்கு இடையே, தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது.
விசாரணையில், அவர், பொன்னேரியைச் சேர்ந்த முசாமில், 50, என்பதும், பிஸ்கட் விற்பனை செய்வது போல, குட்கா புகையிலை பொருட்களை கிராமங்களில் உள்ள கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
தொடர் விசாரணை மேற்கொண்டதில், பொன்னேரியைச் சேர்ந்த, பெருலால், 28, என்பவர், சூளூர்பேட்யைில் இருந்து இவற்றை மொத்தமாக கடத்தி வந்து, சில்லறை விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது.
அதையடுத்து, போலீசார், இருவரையும் கைது செய்தனர். இருவரிடம் இருந்தும், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 77 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.