UPDATED : செப் 01, 2026 08:10 PM
ADDED : செப் 01, 2026 08:03 PM
மீஞ்சூர்:ஆந்திராவில் இருந்து, 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவரை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெமிஸ்பாபு தலைமையில் போலீசார் நேற்று, சோழவரம் டோல்கேட் பகுதியில் உள்ள சோதனை சாவடியில், வாகனங்களை கண்காணித்தனர்.
அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக திரிந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், ஊத்துக்கோட்டை அடுத்த செங்கரை பகுதியை சேர்ந்த ஹரிஷ், 25, செங்குன்றம் காந்தி நகரை சேர்ந்த சதிஷ், 19, என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.
அவர்களை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆந்திராவில் இருந்து, 10கிலோ கஞ்சா வாங்கி வந்து ஆரம்பாக்கம் அருகே பதுக்கி வைத்திருப்பது தெரிந்ததையடுத்து போலீசார் அவற்றை கைப்பற்றினர்.
* கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே பொம்மாஜிகுளம் சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து நடந்து சோதனைச்சாவடியை கடக்க முயன்ற இருவரின், பைகளை சோதனையிட்டனர். அதில், ஒன்றரை கிலோ எடை கஞ்சா சிக்கியது. அதை கடத்திய, மாதர்பாக்கம் பகுதியை சேர்ந்த சதீஷ், 21, விக்னேஷ், 20 ஆகிய இருவரை கைது செய்தனர். பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
