ADDED : அக் 08, 2024 09:13 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் போளிவாக்கம் பகுதியில் நேற்று மாலை 3:00 மணியளவில் மணவாளநகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக பதிவெண் இல்லாமல் டியோ இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் போலீசாரைக் கண்டதும் இருசக்கர வாகனத்தை வேகமாக அருகில் இருந்த மாந்தோப்பில் வேகமாக சென்றனர். அப்போது அங்கிருந்த பள்ளத்தில் விழுந்து இரண்டு பேருக்கும் கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
அவர்களை பின்தொடர்ந்து சென்ற மணவாளநகர் போலீசார் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் சென்னை வியாசர்பாடி எம்.எம். கார்டனைச் சேர்ந்த விக்னேஷ் 27. திருநின்றவூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த நாகராஜ், 30 என்பது தெரியவந்தது. இருவர் மீதும் சென்னை, செவ்வாப்பேட்டை, திருநின்றவூர் என பல காவல் நிலையங்களில் மொபைல்போன் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது.
வழக்கு பதிந்த மணவாளநகர் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.