ADDED : பிப் 26, 2024 11:22 PM

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆறு, பெருமாநல்லுார், சொரக்காய்பேட்டை, நெடியம், சாமந்தவாடா, புண்ணியம் வழியாக பாய்ந்து, பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடைகிறது. இதில், நெடியம் மற்றும் சொரக்காய்பேட்டை இடையே கொசஸ்தலை ஆற்றில், தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளில், பல்வேறு முறை இந்த பாலம் வெள்ளத்தில் இடிந்து விழுந்துள்ளது.
கடந்த 2021ல் இடிந்து விழுந்த பாலம் மூன்று ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் கிடக்கிறது. இடிந்து கிடந்த பாலம், மண் கொட்டி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது.
பாலத்தின் மையத்தில் மண்ணரிப்பு ஏற்பட்டு வருவதால், பாலம் உள்வாங்கியுள்ளது.
அடித்தளம் உறுதியாக இல்லாததால், தொங்கும் நிலையில் உள்ள பாலத்தின் வழியாக வாகனங்கள் பயணித்து வருகின்றன. இதனால், மீண்டும் பாலம் இடிந்து விழும் அபாய நிலை உள்ளது.
சமீபத்தில், பள்ளிப்பட்டு ஒன்றியத்தில், கலெக்டரின் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டம் நடந்து முடிந்தது. கலெக்டரின் பயணத்தின் போது இந்த நெடியம் பாலம் கவனிக்கப்படும் என, பகுதிவாசிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை.
கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், தற்போது இந்த பாலத்தை சீரமைக்கும் பணிகளை துவங்கினால், வரும் மழைக்காலத்திற்கு முன், பாலத்தை கட்டி முடித்து விடலாம். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கொசஸ்தலை கரையோர கிராமத்தினர் காத்திருக்கின்றனர்.
