/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அடிப்படை வசதியில் பின் தங்கும் வள்ளிமலை
/
அடிப்படை வசதியில் பின் தங்கும் வள்ளிமலை
ADDED : பிப் 06, 2024 10:39 PM

வள்ளிமலை:வேலுார் மாவட்டம், வள்ளிமலை, புராதன சிறப்பு பெற்ற வள்ளி திருத்தலம். வேடர் குலத்தில் பிறந்த வள்ளியம்மனுக்கு இங்குள்ள மலை குகை கோவிலில், மூன்று பிரகாரங்களுடன் சன்னிதி அமைந்துள்ளது மிகவும் பிரசித்தம்.
தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். மலையடிவாரத்தில் ஊர்க்கோவிலும், அதையொட்டி, சரவணப்பொய்கை மற்றும் அம்மன் சன்னிதி உள்ளது. வள்ளிமலையில் மாசி மாதம், 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில், சரவணப்பொய்கை மற்றும் ஊர்க்கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மிகவும் மோசமாக உள்ளது.
குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி கேள்விக்குறியாக உள்ளது. இதனால், இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள், கட்டாயம் தனியார் விடுதிகளில் தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. சரவணப்பொய்கை கரையில் உள்ள குடிநீர் தொட்டி, நீண்ட காலமாக பராமரிக்கப்படாததால், சீரழிந்துள்ளது. குளத்தின் வடமேற்கு கரையில் உள்ள பொது கழிப்பறையும் பூட்டிக்கிடக்கிறது.
இதனால், திறந்தவெளியை சிலர் கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். விரைவில் மாசி மாத பிரம்மோற்சவம் துவங்க உள்ள நிலையில், தொடர்ந்து, 10 நாட்களுக்கு இங்கு பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் குவிய துவங்குவர். எனவே வள்ளிமலையில், அடிப்படை வசதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

