/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மருத்துவமனை வளாகத்தில் வாகனங்கள் ஆக்கிரமிப்பு
/
மருத்துவமனை வளாகத்தில் வாகனங்கள் ஆக்கிரமிப்பு
ADDED : பிப் 22, 2024 10:57 PM
பொன்னேரி, பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில், தினமும், 1,000 புறநோயாளிகள் வரை சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு என உள்ள தனி கட்டடத்திலும், 24 மணிநேரமும் மருத்துவ சேவை தொடர்கிறது. இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் வெளிநபர்கள் கொண்டு வந்து நிறுத்தும் வாகனங்களால் பெரும் இடையூறுகள் ஏற்படுகின்றன.
ரயில் நிலையம் செல்லும் பயணியர் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு செல்பவர்கள் தங்களுடைய கார், பைக் உள்ளிட்டவைகளை மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே குறுக்கும் நெடுக்குமாக நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிரமத்திற்கு ஆளாகின்றன. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. ஒரு சில வாகனங்கள் பலநாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின் எடுத்து செல்லப்படுகிறது.
மருத்துவமனை நிர்வாகம், பொன்னேரி காவல் துறையின் உதவியுடன் அரசு மருத்துவமனைக்கு வரும் வாகனங்களை கண்காணிக்கவும், வெளிநபர்கள் வாகனங்களை நிறுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.