ADDED : ஜன 26, 2025 02:39 AM

பொன்னேரி:தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, நேற்று, பொன்னேரியில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த், பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து, பேரணியில் பங்கேற்றார்.
பொன்னேரி சப் - கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, புதிய தேரடி தெரு வழியாக சென்றது.
இதில், 100க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
பேரணியின்போது, '18 வயதிற்கு மேல் உள்ளவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும்; ஒவ்வொரு தேர்தலிலும் தவறாமல் ஓட்டு வேண்டும்; நேர்மையானவரை மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்க வேண்டும்; ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்' என, கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.
ஓட்டு போடுவதின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களுக்கு, துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் துவக்கத்தில், 'ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம், கட்டாயம் ஓட்டளிப்போம்' என, உறுதிமொழி ஏற்றனர்.
* திருத்தணியில், வருவாய் துறையின் சார்பில், தேசிய வாக்காளர்கள் தினத்தையொட்டி, வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, தாசில்தார் மலர்விழி தலைமையில் நேற்று நடந்தது.
இதில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா பங்கேற்று, கொடியசைத்து வைத்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
இதில், தனியார் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.