தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ துணை மின் நிலையத்திற்காக 15 ஆண்டுகளாக காத்திருப்பு: மீஞ்சூரில் 22,000 பயனீட்டாளர்கள் பரிதவிப்பு

துணை மின் நிலையத்திற்காக 15 ஆண்டுகளாக காத்திருப்பு: மீஞ்சூரில் 22,000 பயனீட்டாளர்கள் பரிதவிப்பு

துணை மின் நிலையத்திற்காக 15 ஆண்டுகளாக காத்திருப்பு: மீஞ்சூரில் 22,000 பயனீட்டாளர்கள் பரிதவிப்பு


UPDATED : செப் 11, 2026 09:04 PM

ADDED : செப் 11, 2026 09:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 11, 2026 09:04 PM ADDED : செப் 11, 2026 09:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மீஞ்சூர்: மீஞ்சூரில் துணைமின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு, 15 ஆண்டுகளான நிலையில், எந்தவொரு பணிகளும் நடைபெறாததால், குறைந்த மின்னழுத்தம் மற்றும் இரவு நேரங்களில் மின்வெட்டு ஆகியவற்றால், 22,000 பயனீட்டாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த மேலுார் துணைமின் நிலையத்தில் இருந்து, மீஞ்சூர், நந்தியம்பாக்கம், புங்கம்பேடு, மேலுார், பட்டமந்திரி, சீமாவரம் என, 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் நடைபெறுகிறது.

இந்த துணை மின் நிலையத்தில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மின் பயனீட்டாளர்கள் உள்ளனர். பொன்னேரி துணைமின் நிலையத்திற்கும், 'பேக்பீட்' எனப்படும் அவசரகால மின் தேவைக்கும் இங்கிருந்து தான் மின்சாரம் செல்கிறது.

இதில், மீஞ்சூர் நகரத்தில் உள்ள அரியன்வாயல், எடப்பாளையம், அன்பழகன் நகர், புதுப்பேடு, கேசவபுரம் ஆகிய பகுதிகளில், 20 ஆயிரம் குடியிருப்புகள், 1,600 கடைகள், 12 அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 10 தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் மட்டும், 22 ஆயிரத்திற்கும் அதிகமான மின் பயனீட்டாளர்கள் உள்ளனர்.

சென்னை புறநகர் பகுதிகளில் ஒன்றான, மீஞ்சூர் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அதிகரித்து வரும் நிலையில், மேலுார் துணை மின் நிலையத்தில் இருந்து வினியோகிக்கப்படும் மின்சாரம் போதுமானதாக இல்லாமல் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

குறைந்த மின்னழுத்தம், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு, இரவு நேரங்களில் அதிக மின் பயன்பாடு காரணமாக, மின்மாற்றிகளில் பழுது ஆகியவற்றால், பொதுமக்கள், வியாபாரிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

பெருகி வரும் குடியிருப்பு மற்றும் வணிக பயன்பாட்டிற்கு ஏற்ப, மீஞ்சூர் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு என, தனியாக துணை மின்நிலையம் அமைத்து தீர்வு காண வேண்டும் என, பொதுமக்கள், வியாபாரிகள் சங்கத்தினர் மின்வாரியத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த 2011ல், மீஞ்சூர் பகுதியில் 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. அதன்பின், அதற்கான எந்தவொரு முன்னெடுப்பும் இல்லாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

கடந்த 15 ஆண்டுகளாக நாள்தோறும் தொடரும் மின்வெட்டுகளால், பொதுமக்கள், வியாபாரிகள் அவதிப்படுவதும், துணைமின் நிலையத்திற்காக காத்திருப்பதும் தொடர்கிறது.

குறிப்பாக, கோடைகாலங்களில் மின்வெட்டு பிரச்னையால், ஆழ்துளை மோட்டார்களை சரிவர இயக்க முடியாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. பகல் நேர மின்வெட்டால், வியாபாரிகள் வணிக ரீதியான வருவாய் இழப்பிற்கு ஆளாகின்றனர்.

தற்போதைய மின் பிரச்னைகளுக்கும், எதிர்கால தேவைக்கும் திட்டமிட்டு, மீஞ்சூரில் துணைமின் நிலையம் அமைப்பது அவசியம் என, வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

துணைமின் நிலைய கட்டடங்கள் படுமோசம் கடம்பத்துார், மணவாள நகர் ஆகிய துணை மின்நிலையங்களில் இருந்து, பிரையாங்குப்பம், புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர்.நகர், ஸ்ரீதேவிகுப்பம், செஞ்சி, அகரம், வெண்மனம்புதுார், வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர் உள்ளிட்ட 55க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் விநியோகம் நடைபெறுகிறது. இந்த துணை மின்நிலையங்களை முறையாக பராமரிக்காததால், செடி, கொடிகள் வளர்ந்து, விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கட்டடங்கள் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதன் காரணமாக, அருகில் வசிக்கும் மக்கள் மற்றும் மின் ஊழியர்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். மழைக்காலங்களில் கட்டங்களில் மழைநீர் தேங்கி ஒழுகுவதால், அலுவலக பதிவேடுகள் நனைந்து வீணாகுகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன், மணவாள நகர் துணை மின் நிலையத்திற்கு, புதிய கட்டடம் கட்ட, 2 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கடம்பத்துார், மணவாளநகர் துணை மின் நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் 55 கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us