/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆக்கிரமிப்பு வீடுகள், வணிக வளாகங்களுக்கு எச்சரிக்கை 'நோட்டீஸ்!'
/
ஆக்கிரமிப்பு வீடுகள், வணிக வளாகங்களுக்கு எச்சரிக்கை 'நோட்டீஸ்!'
ஆக்கிரமிப்பு வீடுகள், வணிக வளாகங்களுக்கு எச்சரிக்கை 'நோட்டீஸ்!'
ஆக்கிரமிப்பு வீடுகள், வணிக வளாகங்களுக்கு எச்சரிக்கை 'நோட்டீஸ்!'
ADDED : பிப் 22, 2024 10:53 PM
திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன.
பெரும்பாலானோர் வீடுகள் மற்றும் கடைகளை அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியுள்ளனர்.
குறிப்பாக முருகன் மலைக்கோவில் பகுதியில் மடம் கிராமத்தில், சர்வே எண்: 351/ 1 ல் மலைப்புறம்போக்கு நிலத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் மற்றும் கடைகள் ஆக்கிரமித்து கட்டி உள்ளனர்.
முருகன் கோவில்
அதேபோல், அரக்கோணம் சாலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தில், 30க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் ஆக்கிரமித்துகட்டியுள்ளனர்.
முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டுள்ள, 10 கடைகளும் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் வருவாய்த் துறையினர் ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.
முதற்கட்டமாக, 68 பேருக்கு வருவாய் துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து திருத்தணி வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருத்தணி - அரக்கோணம் சாலையில், 15 ஏக்கர் பரப்பில் அரசு நிலம் உள்ளது. இந்த நிலத்தில், 3 ஏக்கர் பரப்பில் சிலர் ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளன.
200 ஏக்கர் நிலம்
அதேபோல் திருத்தணி மலைக்கோவிலில், 200 ஏக்கர் நிலம் மலைப்புறக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில், 90 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் கட்டி வியாபாரம் செய்து வருகின்றனர். இதுவும் கண்டறியப்பட்டுள்ளன.
மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் உத்தரவின்படி திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய் துறை ஊழியர்கள் மேற்கண்ட இடங்களை சர்வே செய்ததில் அரசு நிலம் ஆக்கிரமித்துள்ளது கண்டுபிடித்துள்ளோம்.
முதற்கட்டமாக வணிக நோக்கத்தில் ஆக்கிரமித்துள்ள கடைகள், 1,905 சட்டத்தின்படி அரக்கோணம் சாலையில், 15 கோவில் கடைகள், 12 தனியார் வணிக வளாகங்கள், மலைக்கோவில், 53 கடைகள் ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளோம்.
நோட்டீஸ் பெற்றவர்கள், தங்களிடம் உரிய ஆவணங்கள் இருந்தால் இம்மாத இறுதிக்குள் வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோரிடம் காண்பித்து ஆக்கிரமிப்பு இல்லை என நிரூபித்துக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருத்தணி நகரில், கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டி பயன்படுத்தி வருகின்றனர்.
எச்சரிக்கை
இந்நிலையில், அடுத்த மாதம் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்க உள்ள நிலையில், திருத்தணி வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் என சர்வே செய்து ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் மற்றும் கடைகள், வணிக வளாகங்கள் கண்டுபிடித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி வருகிறது.
இது ஆளுங்கட்சியினர் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு, தேர்தலில் எதிராக செயல்படுவர் என ஆளுங்கட்சி பிரமுகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே ஆளுங்கட்சி சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், வருவாய் துறை அதிகாரிகளை சந்தித்து தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டாம், நோட்டீஸ் வழங்க வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.