/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தண்ணீர் பாட்டிலில் பல்லி சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை
/
தண்ணீர் பாட்டிலில் பல்லி சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை
தண்ணீர் பாட்டிலில் பல்லி சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை
தண்ணீர் பாட்டிலில் பல்லி சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை
ADDED : ஜூலை 14, 2025 01:37 AM

பொன்னேரி:கோவில் நிகழ்ச்சிக்கு வாங்கிய தண்ணீர் பாட்டிலில் பல்லி இறந்து கிடந்தததால், அதிர்ச்சியடைந்த மக்கள், தனியார் சுத்திகரிப்பு நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சென்னை புழல் கதிர்வேடு பகுதியைச் சேர்ந்தவர் பாபு, 46. இவர், சென்னை மாநகராட்சி, 31வது வார்டு கவுன்சிலர் சங்கீதாவின் கணவர்.
நேற்று பாபு, பொன்னேரி அடுத்த சிங்கிலிமேடு கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவில் பூஜைக்காக, குடும்பத்தினருடன் வந்திருந்தார்.
இதில், கிராமவாசிகள் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர். பூஜைகள் முடிந்து உணவு பரிமாறுவதற்காக குடும்பத்தினர், அங்கிருந்த தண்ணீர் பாட்டில்களை எடுத்தனர். அப்போது, ஒரு பாட்டிலின் மூடியை திறந்தபோது, அதில் பல்லி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தண்ணீர் பாட்டில்கள், பொன்னேரி அடுத்த பொன்நகர் பகுதியில் உள்ள தனியார் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து வாங்கியது தெரிந்து, அங்கு சென்று முறையிட்டனர். அங்கு பணியில் இருந்தவர்கள் அலட்சியமாக பதில் கூறியதால், ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லி விழுந்த குடிநீர் பாட்டில் மட்டுமின்றி, பல குடிநீர் பாட்டில்களில் இருந்த தண்ணீரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குடித்துள்ளதாகவும், பாதிப்புகள் ஏதும் நேரிட்டால், தனியார் குடிநீர் ஆலை நிர்வாகமே அதற்கு பொறுப்பு என தெரிவித்தனர்.
குடிநீர் பாட்டில்களில் தயாரிப்பு தேதி, தயாரிப்பு எண் போன்றவை அச்சிடப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொன்னேரி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். இது தொடர்பாக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கும்படி கூறினர். இதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.