/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூவம் ஆறு பராமரிப்பில் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள்...அலட்சியம்!:ஆக்கிரமிப்பில் சிக்கி விவசாய நிலமாக மாறிய அவலம்
/
கூவம் ஆறு பராமரிப்பில் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள்...அலட்சியம்!:ஆக்கிரமிப்பில் சிக்கி விவசாய நிலமாக மாறிய அவலம்
கூவம் ஆறு பராமரிப்பில் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள்...அலட்சியம்!:ஆக்கிரமிப்பில் சிக்கி விவசாய நிலமாக மாறிய அவலம்
கூவம் ஆறு பராமரிப்பில் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள்...அலட்சியம்!:ஆக்கிரமிப்பில் சிக்கி விவசாய நிலமாக மாறிய அவலம்
ADDED : பிப் 05, 2025 09:47 PM

கடம்பத்துார்:திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், அதிகத்துார் பகுதியில், கூவம் ஆற்றை பராமரிப்பதில் நீர்வளத் துறை அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால், ஆக்கிரமிப்பில் சிக்கி, விவசாய நிலமாக மாறீயுள்ளது குறித்து வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வேலுார் மாவட்டத்தில், தொடங்கும் கல்லாறு, திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அடுத்த, கேசாவரம் அணைக்கட்டில் இருந்து கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு என பிரிகிறது. இதில், கல்லாற்றில் இருந்து வரும் நீர், எப்போதும் கொசஸ்தலை ஆற்றுக்கு செல்லும் வகையில் அணைக்கட்டு கட்டப்பட்டு உள்ளது.
பூண்டி ஏரி நிரம்பினால், இங்குள்ள ஷட்டர்கள் திறக்கப்பட்டு கூவம் ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்த கூவம் ஆறு, பேரம்பாக்கம், கடம்பத்தூர், மணவாள நகர், அரண்வாயல், ஜமீன்கொரட்டூர், பருத்திப்பட்டு, மதுரவாயல், கோயம்பேடு வழியாக, 75 கிலோ மீட்டர் சென்று, நேப்பியர் பாலம் அருகே வங்கக்கடலில் கலக்கும் வகையில் உள்ளது. இந்த கூடம் ஆற்றை, நீர்வள ஆதாரத் துறையினர் முறையாக பராமரிக்கவில்லை.
மேலும், கடம்பத்துார் ஒன்றியம், அதிகத்துார் பகுதியில், கூவம் ஆற்றை ஆக்கிரமித்து, விவசாயம் செய்து வருகின்றனர். இவ்வாறு ஆக்கிரமித்து விவசாயம் நடந்து வருவதை நீர்வள ஆதாரத் துறையினர் கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர்.
மேலும், பேரம்பாக்கம், கொண்டஞ்சேரி, சத்தரை, புதுமாவிலங்கை, கடம்பத்துர், அதிகத்துார் உட்பட பல இடங்களில், கூவம் ஆற்றில், மணல் கடத்தல் அமோகமாக நடந்து வருகிறது. மணல் கடத்தலை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் கண்டும் காணாமலும் விட்டு விடுகின்றனர்.
இந்த மணல் கடத்தலை தடுக்க வேண்டிய காவல் துறையினர், அதற்கு உண்டானவற்றை பெற்றுக் கொண்டு, கண்டும், காணாமல் விட்டு விடுகின்றனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளித்தாலும், அவர்களும் அதை கண்டு கொள்வதில்லை என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், கூவம் ஆற்றுப்பகுதியில் கடம்பத்துார், மணவாள நகர், புட்லுார், அரண்வாயல் உட்பட பல பகுதிகளில் தற்போது குப்பை கொட்டி வருகின்றனர். இதனால், நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதாக பகுதிவாசிகள் பலமுறை புகார் அளித்தாலும், அதை நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாதது, பகுதிவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது.
மேலும், கூவம் ஆறு, பல இடங்களில் கருவேல மரங்கள் வளர்ந்து முட்புதராகவும், சில இடங்களில் ஆக்கிரமிப்பின் பிடியிலும் சிக்கியுள்ளது. இதனால், கூவம் ஆற்றில், மழை நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கூவம் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவும், மணல் கடத்தலை தடுக்கவும், கருவேல மரங்களை அகற்றவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நீர்வள ஆதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மணவாள நகர் பகுதியில் கூவம் ஆற்றில் குப்பை கொட்டுவது குறித்து சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளோம். மேலும் அதிகத்துார் பகுதியில் கூவம் ஆற்று ஆக்கிரமிப்பு குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் அளித்துள்ளோம்' என்றார்.