வணிக வளாகம், வீடுகளில் மின் மோட்டார் வைத்து குடிநீர் திருட்டு; கண்டுகொள்ளாத அதிகாரிகளால் அல்லல்படும் மக்கள்
வணிக வளாகம், வீடுகளில் மின் மோட்டார் வைத்து குடிநீர் திருட்டு; கண்டுகொள்ளாத அதிகாரிகளால் அல்லல்படும் மக்கள்
UPDATED : மே 30, 2026 09:51 AM
ADDED : மே 30, 2026 02:24 AM

திருவாலங்காடு: ஊராட்சி மற்றும் நகரங்களில் உள்ள வீடுகள், வணிக வளாகங்களில், உள்ளாட்சி அமைப்பு வாயிலாக வினியோகிக்கப்படும் குடிநீரை மின் மோட்டார் வைத்து திருடுவது அதிகரித்துள்ளது. இதனால், மேட்டுப்பகுதி மற்றும் தொலைவில் வசிக்கும் குடியிருப்பு மக்கள், குடிநீரின்றி சிரமப்படுகின்றனர். அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை என, மக்கள் புலம்புகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை, கும்மிடிப்பூண்டி உட்பட 14 ஒன்றியங்களில், 525 ஊராட்சிகளும், திருவள்ளூர், பூந்தமல்லி, திருவேற்காடு, திருநின்றவூர், திருத்தணி, பொன்னேரி ஆகிய நகராட்சிகளும், ஆவடி மாநக ராட்சியும் உள்ளன.
பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, ஊத்துக்கோட்டை, ஆரணி, கும்மிடிப்பூண்டி, திருமழிசை, நாரவாரிகுப்பம், மீஞ்சூர் ஆகிய எட்டு பேரூராட்சிகளும் உள்ளன.
குடிநீர் தட்டுப்பாடு இங்கு, உள்ளாட்சி நிர்வாகங்கள் வாயிலாக, 2,250க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டு, 30 லட்சத்து 50,000த்திற்கும் மேற்பட்ட மக்கள், 35,000த்திற்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப் படுகிறது.
அதேபோல், அத்திப்பட்டு கூட்டு குடிநீர் திட்டம், அனுப்பம்பட்டு கூட்டு குடிநீர் திட்டம், மீஞ்சூர் பகுதிக்கு காட்டுப்பள்ளியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், பூண்டி, புழல், தேர்வாய்கண்டிகை ஆரணியாறு, கொசஸ்தலையாறு, ஒன்றியத்தின் முக்கிய ஏரிகள் இணைப்பு சிறு நீர்த் தேக்கங்கள் வாயிலாக, நீர் சுத்திகரிப்பு செய்து வினியோகம் செய்யப் படுகிறது.
இருப்பினும், மாவட்டத்தின் பல ஊர்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. மக்கள் குடிநீருக்காக குடத்துடன் அலையும் நிலையும் தொடர்கிறது.
குடிநீர் வினியோகம் செய்யும்போது திருத்தணி, திருவள்ளூர் உள்ளிட்ட ந கராட்சிகளிலும், பள்ளிப்பட்டு, திருத்தணி, திருவாலங்காடு, கடம்பத்துார், திருவள்ளூர் உள்ளிட்ட ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில், மின் மோட்டார் வைத்து குடிநீரை திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
பறிமுதல் இதனால், மின் மோட்டார் பயன்படுத்தாத வீடுகளில், குடிநீர் வருவது குறைந்து தட்டுப்பாடு ஏற்படுகிறது. சில வீடுகளில், குடிநீர் வருவதே இல்லை. மேலும், மேடான பகுதிகளில் சுத்தமாக குடிநீர் வருவதே இல்லை.
இது, பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. குடிநீர் பிடிக்க மின் மோட்டாரை பயன்படுத்தக்கூடாது என, உள்ளாட்சி நிர்வாகத்தினர் அவ்வப்போது அறிவித்தும், மின் மோட்டார்களை பறிமுதல் செய்தும், குடிநீர் திருடுவது நின்றபாடில்லை. அதேபோல், மினி தொட்டிகளிலும், குழாய் இணைப்பு ஏற்படுத்தி குடிநீர் திருடுவது அதிகரித்துள்ளது.
திருத்தணி, கனகம்மாசத்திரம், திருவாலங்காடு, கடம்பத்துார், மப்பேடு, ஊத்துக்கோட்டை, பூண்டி என, பல பகுதிகளில் வீடுகள், வணிக பயன்பாட்டிற்கு குடிநீர் இணைப்பு பெற்றவர்கள், மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சி திருடுகின்றனர்.
இதனால், மேடான பகுதிகளுக்கு குடிநீர் வருவதில்லை. மின் மோட்டாரை பயன் படுத்தி குடிநீர் திருடுவது, தற்போது நகர் பகுதிகளை தொடர்ந்து கிராம பகுதிகளிலும் அதிகரித்துள்ளது. அதனால், ஊராட்சிகளிலும் குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது.
