ADDED : அக் 11, 2024 02:05 AM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஒன்றியங்களை சேர்ந்த அம்மையார்குப்பம், ஸ்ரீகாளிகாபுரம், அத்திமாஞ்சேரிபேட்டை, பொதட்டூர்பேட்டை, நல்லவானம்பேட்டை உள்ளிட்ட 30க்கும் மறே்பட்ட கிராமங்களில் விசைத்தறி நெசவு தொழில் நடந்து வருகிறது.
இதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் ஒரு பகுதியில் தறிக்கூடம் அமைத்து குடிசை தொழிலாக நெசவு செய்யப்பட்டு வருகிறது. நெசவு தொழிலில் வருவாய் குறைவு என்றாலும், வீட்டிலிருந்தே சம்பாதிக்க முடிகிறது என்பதால், பாரம்பரியமாக நெசவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
லுங்கி மற்றும் சேலை ரகங்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் லுங்கி ரகங்கள் நுால் மற்றும் சாயம் தரமானதாக இருக்கும் என்பதால், சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
காலை முதல் இரவு வரை நெசவு தொழிலில் ஈடுபட்டு வரும் நெசவாளர்கள், தீபாவளி பண்டிகையை ஒட்டி கூடுதல் நேரம் ஒதுக்கி நெசவு செய்து வருகின்றனர். இதன் வாயிலாக, வரும் தீபாவளி பண்டிகை செலவுகளை சமாளிக்க முடியும் என நம்புகின்றனர்.
