மின் கணக்கீட்டாளர் அலட்சியத்தால் ரூ.6 கோடி இழப்பு: நிலுவை என நுகர்வோரிடம் வசூல் நடத்தும் வாரியம் : என்னதான் நடக்குது?
மின் கணக்கீட்டாளர் அலட்சியத்தால் ரூ.6 கோடி இழப்பு: நிலுவை என நுகர்வோரிடம் வசூல் நடத்தும் வாரியம் : என்னதான் நடக்குது?
UPDATED : மே 18, 2026 10:07 PM
ADDED : மே 18, 2026 08:42 PM

- நமது நிருபர் -
சென்னை அம்பத்துார் பகுதியில், வீடு, கடை போன்றவற்றில் மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் பெண் பணியாளர் அலட்சியம் காட்டியதால், மின் வாரியத்திற்கு, 6 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வருவாய் இழப்பை சரிக்கட்ட, இரண்டு ஆண்டுகள் நிலுவை என, நுகர்வோருக்கு 'நோட்டீஸ்' வழங்கி, தவணை முறையில் வாரியம் வசூல் நடத்தி வருகிறது. மற்ற இடங்களிலும் குளறுபடி உள்ளதா என, ஆய்வு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில், வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாட்டை, மின் வாரிய பணியாளர்கள் கணக்கு எடுக்கின்றனர். அவர்கள், ஒவ்வொரு மின் இணைப்பு இடத்திற்கும் சென்று மீட்டரை பார்த்து, கணக்கெடுக்க வேண்டும்.
சிலர், நேரில் செல்லாமல் தங்கள் இஷ்டத்திற்கு கணக்கு எடுக்கின்றனர். இதனால், குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு, அரசின் இலவச சலுகை கிடைப்பதில்லை. அதிக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, குறைத்து கணக்கு எடுப்பதால் மின் வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
அதன்படி, மின் வாரியத்தின், சென்னை அம்பத்துார் கோட்ட அலுவலகத்தின் கீழ் உள்ள அடையாளம்பட்டு அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் கணக்கீட்டாளர் ஒருவர், தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள மின் இணைப்புகளுக்கு நேரில் சென்று கணக்கு எடுக்காமல், இஷ்டத்திற்கு கணக்கு எடுத்துள்ளார்.
இரு ஆண்டுகளாக இந்த தவறு நடந்துள்ளது. இதை இந்தாண்டு ஜனவரியில் கண்டுபிடித்த அதிகாரிகள், கணக்கீட்டாளரை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளனர்.
அவர் கணக்கெடுக்க வேண்டிய அனைத்து மின் இணைப்புகளின் மீட்டர்களையும் ஆய்வுக்கு உட்படுத்தியதில், பெரும்பாலான இணைப்புகளில் குறைவாக கணக்கு எடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விபரத்தை நுகர்வோருக்கு தெரிவித்து, இழப்பு ஏற்பட்ட தொகையை வசூலிக்கும் பணியில் தற்போது, மின் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பெரும்பாலான மின் இணைப்புகளில், ஒவ்வொன்றிலும், 2,000 - 3,000 யூனிட் பயன்படுத்தப்பட்டதில், 500 - 600 யூனிட் தான் கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதனால், 1,250 இணைப்புகளை ஆய்வு செய்ததில், 6 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட நுகர்வோருக்கு, கடந்த இரு ஆண்டுகளாக செலுத்த வேண்டிய உண்மையான கட்டணம் எவ்வளவு, செலுத்தியது எவ்வளவு, செலுத்த வேண்டியது எவ்வளவு என்ற விபரம் அடங்கிய நோட்டீஸ் வழங்கி, கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை, 1,200 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், இன்னும் 50 பேருக்கு அனுப்ப வேண்டியுள்ளது. இதனால், நுகர்வோர் அதிக கட்டணம் செலுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு, முழுக்க முழுக்க கணக்கெடுப்பு குளறுபடியே காரணம்.
எனவே, ஒவ்வொரு நுகர்வோரும் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டுமோ, அதை ஒரே சமயத்தில் மொத்தமாக செலுத்த முடியாது என்பதால், தவணை முறையில் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அம்பத்துார் போன்ற பிற பகுதிகளிலும் நடந்துள்ளதா என, மின் வாரிய அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
மாநிலம் முழுதும் மறு ஆய்வு அவசியம் 'டேபிள் ரீடிங்' எனப்படும் அலுவலகத்தில் இருந்தபடியே கணக்கீட்டாளர்கள், மின் பயன்பாட்டை கணக்கு எடுப்பது முறையற்ற செயல். இதை, ஏதோ ஒரு அலுவலகத்தில் மட்டும் நடந்ததாக கருதாமல், மாநிலம் முழுதும் உள்ள அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் ஆய்வு செய்து, மின் பயன்பாடு கணக்கு எடுப்பில் நடக்கும் உண்மை நிலவரத்தை அறிய வேண்டும். தவறு செய்த, பணியாளர்கள் நிர்வாக ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும். பணியாளரின் தவறுக்கு, நுகர்வோர் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கான மின் பயன்பாட்டை கணக்கெடுத்து, அதற்கு ஏற்ப கட்டணத்தை இப்போது செலுத்துங்கள் என, நுகர்வோரை நிர்ப்பந்திப்பது சரியல்ல. இரண்டு ஆண்டுகள் விடுபட்ட தொகையை மொத்தமாக, உடனே யாராலும் செலுத்த முடியாது. எனவே, கூடுதல் தொகையை மாதந்தோறும், மிக குறைந்த தவணையில் செலுத்த அவகாசம் அளிக்கப்பட வேண்டும். - டி.சடகோபன், தலைவர், தமிழக முற்போக்கு நுகர்வோர் மையம்
