ADDED : மார் 01, 2026 05:51 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் கிராமம், பழவேற்காடு ஏரியை ஒட்டி அமைந்துள்ளது.
கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள், மீன் வாங்க சுண்ணாம்புகுளம் செல்வர். அங்குள்ள பேருந்து நிலையம் அருகே, 10 ஆண்டுகளுக்கு முன் மீன் மார்க்கெட் கட்டடம் கட்டப்பட்டது.
சில ஆண்டுகள் மட்டுமே இக்கட்டடம் பயன்பாட்டில் இருந்தது. அதன்பின், இடநெருக்கடி காரணமாக, மார்க்கெட்டை மீன் விற்பனையாளர்கள் தவிர்த்து விட்டனர்.
தற்போது, சுண்ணாம்புகுளம் மற்றும் ஓபசமுத்திரம் கிராமத்திற்கு இடைப்பட்ட பகுதியில், சாலையோரத்தில் மீன் விற்பனை கடைகள் இயங்கி வருகின்றன. அங்கு, 20க்கும் மேற்பட்ட மீன் விற்பனை கடைகள் இயங்கி வருகின்றன. பயன்பாட்டில் இல்லாத மீன் மார்க்கெட் கட்டடத்தில், 10 கடைக்கு மேல் வைக்க முடியாது என, மீன் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பழவேற்காடு ஏரிக்கு அருகில், சுண்ணாம்புகுளம், ஓபசமுத்திரம் கிராமங்களுக்கு பொதுவான இடத்தில், தாராளமாக இடம் ஒதுக்க வேண்டும்.
அந்த இடத்தில், 25க்கும் மேற்பட்ட கடைகளுடன் மீன் மார்க்கெட் கட்டடம் அமைக்க வேண்டும் என, மீன் விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
