ஆரணி ஆற்று மேம்பாலத்தில் மின்விளக்கு அமைக்கப்படுமா?
ஆரணி ஆற்று மேம்பாலத்தில் மின்விளக்கு அமைக்கப்படுமா?
ADDED : பிப் 23, 2026 06:04 AM
ஊத்துக்கோட்டை: ஆரணி ஆற்றில் மேம்பாலம் கட்டப்பட்ட நிலையில், மின்விளக்கு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் சாலை 28 கி.மீ., உடையது. இதனிடையே போந்தவாக்கம், பெரிஞ்சேரி, கச்சூர், சீத்தஞ்சேரி, ஒதப்பை, பூண்டி, புல்லரம்பாக்கம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில், 1928ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், 37,000 ரூபாய் மதிப்பீட்டில், 12 கணுக்கள் வைத்து தண்ணீர் செல்லும் வகையில் தரைப்பாலம் கட்டப்பட்டது. அந்த கால கட்டத்தில் இது போதுமானதாக இருந்தது.
மக்கள் தொகை, வாகன பெருக்கத்தால், நான்கு ஆண்டுகளுக்கு முன், 29 கோடி ரூபாயில் மேம்பாலம் கட்டப்பட்டது. தினமும் 10,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இப்பாலத்தின் வழியே சென்று வருகின்றன. ஆனால், இதுவரை பாலத்தில் மின்விளக்கு அமைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் வாகனங்களின் வெளிச்சத்தில் தான் செல்ல வேண்டியுள்ளது.
இதுகுறித்து, திருவள்ளூர் காங்., - எம்.பி., கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆகியோரிடம் மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லை. எனவே, பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன், ஊத்துக்கோட்டை மேம்பாலத்தில் மின் விளக்கு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
