அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் தீவிரம்
அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் தீவிரம்
ADDED : பிப் 21, 2026 05:26 AM

ஆர்.கே.பேட்டை: கொசஸ்தலை ஆற்றங்கரையோர அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி, கொசஸ்தலை ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது. கடந்த 2021ல் பெய்த கனமழையின் போது, கொசஸ்தலை ஆற்றின் வெள்ளம், திசை மாறி பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது. இதில், மூன்றடுக்கு வகுப்பறை கட்டடம் சேதமடைந்தது.
மேலும், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து நான்கு ஆண்டுகளாக கட்டப்படாமல் கிடந்தது. இதுகுறித்து நம் நாளிதழிலும் செய்தி வெளியானது. தற்போது, பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி துவங்கியுள்ளது.
ஏற்கனவே இரண்டு முறை கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளதால், தற்போது இரும்பு, சிமென்ட் கான்கிரீட் துாண்களுடன் உறுதியாக கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பள்ளிக்கு அருகில், 200 மீட்டர் அகலத்தில் கொசஸ்தலை ஆற்றில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்திற்கு, இரும்பு கம்பிகள் பயன்படுத்தப்படாத நிலையில், பள்ளியின் சுற்றுச்சுவருக்கு இரும்பு கம்பிகளுடன் தரமான சுற்றுச்சுவர் அமைப்பது, பெற்றோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
