/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
தீபநாயகர் சுவாமி சிலையை மீட்க கோரி போலீசில் புகார்
/
தீபநாயகர் சுவாமி சிலையை மீட்க கோரி போலீசில் புகார்
தீபநாயகர் சுவாமி சிலையை மீட்க கோரி போலீசில் புகார்
தீபநாயகர் சுவாமி சிலையை மீட்க கோரி போலீசில் புகார்
ADDED : அக் 19, 2024 02:58 AM
திருவாரூர்,:தீபங்குடி தீபநாயகர் சுவாமி கோவிலில் கொள்ளை போன, தீபநாயகர் பஞ்சலோக சுவாமி சிலை, அமெரிக்காவில் ஏலத்தில் விட இருப்பதால், அதை மீட்க திருவாரூர் மாவட்டம், குடவாசல் போலீசில், ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் நேற்று புகார் அளித்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டி:
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே தீபங்குடியில் அமைந்துள்ள சமணக்கோவிலான தீபநாயகர் சுவாமி கோவில், சோழர் காலத்தில் கட்டப்பட்டது.
இக்கோவிலில் இருந்த தீபநாயகர் பஞ்சலோக சுவாமி சிலை, 20 ஆண்டுகளுக்கு முன் திருடு போனது. சிலை உயரம், 76 செ.மீ., ஆகும்.
தற்போது இச்சிலை அமெரிக்காவில் உள்ளது. சுவாமி சிலையை, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தவர், சஞ்சீவ் அசோகன். இவர், 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர். ஓராண்டாக இவரை கைது செய்யாமல் தவிர்த்து வருகின்றனர். இதுதொடர்பாக, எதிர்க்கட்சிகள் மவுனம் சாதிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
கடந்த, 2004ல் இச்சுவாமி சிலையை வாங்கியவர், அமெரிக்காவை சேர்ந்த சுபாஷ் சந்திரகபூர். சிலை கடத்தல் தொடர்பாக இவரும், ஓராண்டாக கைது செய்யப்படவில்லை.
இவர், 2019ல், தீபநாயகர் பஞ்சலோக சிலையை, நியூயார்க் நகரைச் சேர்ந்த ராஜீவ் சவுத்திரியிடம், 2.34 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார். தற்போது, இச்சிலை ஏலத்தில் விற்கப்பட உள்ளதாக தெரிய வருகிறது.
சுவாமி சிலை கொள்ளை தொடர்பாக, சாட்சியத்தை அழிக்க உதவிய டாக்டர் ஜான் டுவிலி மற்றும் ராஜீவ் சவுத்ரி ஆகிய இருவரையும், இந்தியா கொண்டு வர வேண்டும்.
இது குறித்த அனைத்து தகவல்களும், கடந்த ஆண்டு அப்போதைய காவல்துறை தலைவர், உள்துறை செயலர் ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளாக, சுவாமி சிலை கொள்ளையை பற்றி செயல் அலுவலர், அறநிலையத்துறை இணை ஆணையர், போலீசாருக்கு தெரிவிக்காமல் மறைத்து விட்டனர்.
இச்சிலையை மீட்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் வழக்கு பதிந்து, நடவடிக்கை எடுப்பர் என, நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

