/
உள்ளூர் செய்திகள்
/
திருவாரூர்
/
பிரசவித்த பெண் உயிரிழப்பு உறவினர்கள் போராட்டம்
/
பிரசவித்த பெண் உயிரிழப்பு உறவினர்கள் போராட்டம்
ADDED : செப் 28, 2025 04:00 AM
திருவாரூர்:திருவாரூர் அரசு மருத்துவமனையில், பிரசவித்த பெண் இறந்ததால், உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் அருகே, சித்திரையூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் சவுமியா, 26. இவருக்கும், நாகை மாவட்டத்தை சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்கும், கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
சில தினங்களுக்கு முன், திருவாரூர் விஜயபுரம், அரசு தாய் சேய் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சவுமியா சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு, நேற்று, ஆண்குழந்தை பிறந்தது. பிரசவத்தின்போது, சவுமியாவுக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.
அவரை, திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் சவுமியா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
உறவினர்கள் கூறுகையில், 'விஜயபுரம் அரசு மருத்துவமனையில், ஆம்புலன்ஸ் இருந்தது; ஆனால், டிரைவர் இல்லை. வேறு ஆம்புலன்ஸ் வரவைத்து, மருத்துவமனைக்கு சவுமியாவை கொண்டு செல்ல ஒரு மணிநேரம் தாமதமானது. வலிப்பு வந்தவுடன், அழைத்து சென்று இருந்தால், அவர் உயிர் பிழைத்து இருப்பார்' என்றனர்.