/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துாரில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் பக்தர்கள்
/
திருச்செந்துாரில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் பக்தர்கள்
திருச்செந்துாரில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் பக்தர்கள்
திருச்செந்துாரில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் பக்தர்கள்
ADDED : ஆக 11, 2024 11:30 PM

துாத்துக்குடி : முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாகவும், பரிகார தலமாகவும் விளங்குகிறது.
கடற்கரையில் அமைந்துள்ள முருகன் கோவில் என்பதால் சிறப்பு பெற்றதாகும். சூரனை வதம் செய்த இடமான இங்கு நடக்கும் கந்தசஷ்டி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
300 கோடி பணி
சமீபமாக மாதந்தோறும் பவுர்ணமி நாளில், லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் தங்கி வழிபட்டு செல்கின்றனர். பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதற்கேற்ப அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை.
பக்தர்கள் கூறியதாவது:
திருப்பதிக்கு இணையாக திருச்செந்துாரை மாற்றுவதாக கூறி, ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஹெச்.சி.எல்., நிறுவனம் சார்பில், 300 கோடி ரூபாய்க்கு பெருந்திட்ட வளாக பணிகள் நடக்கின்றன. ஹெச்.சி.எல்., நிறுவனம் மட்டும், 200 கோடி ரூபாய் உபயமாக வழங்கியது.
பெருந்திட்ட வளாகத்தில் பக்தர்கள் ஓய்வறை, காத்திருப்பு அறைகள், அன்னதான மண்டபம், கல்யாண மண்டபம், கலையரங்கம், முடி காணிக்கை மண்டபம் என, பல கட்டுமானங்கள் நடக்கின்றன.
இப்பணிகளுக்காக கோவில் வளாகத்தில் இருந்த பழைய கட்டடங்கள் அகற்றப்பட்டு, புதிய கட்டுமான பணி ஜரூராக நடக்கிறது. இதனால், கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்க கூட இடமின்றி அவதிப்படுகின்றனர்.
கோவில் வளாகத்தில் இருந்த விடுதிகள், ஏற்கனவே 2017ல் அகற்றப்பட்டு விட்டன. அதற்கு பதிலாக, யாத்ரீகர்கள் நிவாஸ் விடுதிகள் கட்டப்பட்டு, 90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன.
பர்னிச்சர் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகளுக்காக நிதியில்லாமல் அப்பணிகள் தொய்வாக நடக்கின்றன. அறநிலையத்துறை கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தால் மட்டுமே யாத்ரீகர்கள் நிவாஸ் விடுதிகள் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரும்.
போக்குவரத்து நெரிசல்
யாத்ரீகர்கள் நிவாஸ் விடுதிகளை அறநிலையத்துறையால் பராமரிக்க முடியாது என்ற நிலையில், அதை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க, நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, கோவில் வளாகத்தில் நடக்கும் பெருந்திட்ட வளாக பணிகளால் பழைய கழிப்பறைகள், குளியலறைகள் அகற்றப்பட்டுவிட்டன.
இதனால் கோவில் வளாகத்தில், ஆங்காங்கே பக்தர்கள் குளிப்பதற்காக தண்ணீர் தொட்டிகள், சிறிய அளவிலான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில், சொற்ப எண்ணிக்கையிலான கழிப்பறைகளே உள்ளன.
அதுபோல, வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த கோவில் வளாகத்தில் போதிய இடமில்லாத நிலை உள்ளது.
சாதாரண நாட்களில் -500 - 1,000 வாகனங்கள் வரையிலும், பவுர்ணமி மற்றும் திருவிழா நாட்களில் 12,000 வாகனங்கள் வருகின்றன.
வெளியூர் வாகன ஓட்டிகள் எங்கே நிறுத்துவது என தெரியாமல், ஆங்காங்கே நிறுத்தி விடுவதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து போலீசாரால் அபராதம் விதிக்கப்படும் நிலை உள்ளது.
கோவில் பெருந்திட்ட வளாக பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி, நகரத்தை அப்படியே விட்டு விட்டனர்.
கோவிலுக்கு செல்லும் வாகனங்களை ஊருக்கு வெளியே ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் மற்றும் வாகனம் நிறுத்துமிடம் ஏற்படுத்தி கொடுத்தால் மட்டுமே பக்தர்கள் படும் அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.