/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
ஆளுங்கட்சி ஆசியோடு செம்மண் கடத்தல்; வருவாய், கனிம வள அதிகாரிகள் 'கப்சிப்'
/
ஆளுங்கட்சி ஆசியோடு செம்மண் கடத்தல்; வருவாய், கனிம வள அதிகாரிகள் 'கப்சிப்'
ஆளுங்கட்சி ஆசியோடு செம்மண் கடத்தல்; வருவாய், கனிம வள அதிகாரிகள் 'கப்சிப்'
ஆளுங்கட்சி ஆசியோடு செம்மண் கடத்தல்; வருவாய், கனிம வள அதிகாரிகள் 'கப்சிப்'
ADDED : ஆக 03, 2024 05:05 AM

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு குளங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சிலர் அதை தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கனரக வாகனங்களில் மண் எடுத்துச் செல்லக்கூடாது என விதிமுறை உள்ள நிலையில், பல இடங்களில் லாரிகளில் வண்டல் மண், சரள் மண், செம்மண் அனுமதியின்றி திருடப்படுகிறது.
மாவட்டத்தில், ஏரல் தாலுகாவில் இருவப்பபுரம் பகுதி --- 1 பேய்க்குளம் குளத்தில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலர் விதி மீறி, வண்டல் மண்ணுக்கு பதில், செங்கல் சூளைக்கு தேவையான செம்மண்ணை சட்ட விரோதமாக லாரிகளில் திருடிச் செல்வதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டிஉள்ளனர்.
கடம்பாகுளத்தில் சட்ட விரோதமாக ஐந்து ஹிட்டாச்சி இயந்திரங்களால், லாரிகளில் விதிமீறி மண் எடுத்து செல்லப்பட்டதாக புகார் எழுந்தது. அதிகாரிகள் அங்கு சென்றபோது, லாரிகள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பின.
மாவட்டம் முழுதும் விவசாயிகள் போர்வையில் தொடர்ந்து மண் கடத்தல் நடந்து வருகிறது. எந்தவித அனுமதியும் பெறாமல் கனரக வாகனங்களில் மண் திருட்டு நடப்பது குறித்து புகார் அளித்தபோதிலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் நிலை உள்ளது.
சமூக செயற்பாட்டாளர் காந்திமதிநாதன் கூறியதாவது: குலையன்கரிசல் பெட்டைகுளத்தில் வண்டல் மண் அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் எடுக்காமல், மிகப் பெரிய லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகிறது. இரவிலும் செம்மண் திருட்டு நடக்கிறது.
போட்டோ ஆதாரங்களுடன் தாசில்தார், நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தபோதிலும் நடவடிக்கை இல்லை.விதிமீறல்களில் ஈடுபடுவோர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். வண்டல் மண்ணுக்கு பதில் வணிகநோக்கில் செம்மண் எடுப்பதால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
முறையில்லாமல் மண் அள்ளப்படுவதால் குளங் களுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான இலவச வண்டல் மண் அனுமதியை பெற்று, சட்டவிரோதமாக சரள், செம்மண் கடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மண் திருட்டில் ஈடுபடும் வாகனங்களை சிறைபடுத்த வேண்டும். விதி மீறல்கள் தொடரும் பட்சத்தில் ஆவணங்களையும், வீடியோக்களையும் வைத்து கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.