ADDED : அக் 25, 2024 02:29 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் இருந்து விரலி மஞ்சள், பீடி இலை உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இதனால், கடலோரப் பகுதிகளில் சுங்கத்துறையினர், கியூ பிரிவு போலீசார், மரைன் போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் தனித்தனியே ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், துாத்துக்குடி இனிகோநகர் பகுதியில் சுங்கத்துறையினர் நேற்று அதிகாலை திடீர் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற சரக்கு வாகனத்தை மறித்தனர். அதிகாரிகளை கண்டதும் வாகனத்தில் இருந்தவர்கள் தப்பியோடி விட்டனர்.
வாகனத்தை சோதனையிட்டபோது, 40 பண்டல்களில் 1,420 கிலோ பீடி இலை இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு 40 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
இதையடுத்து, பீடி இலை மூட்டைகள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.