திருச்செந்துாரில் 9.1 செ.மீ., மழை ஜி.ஹெச்.,சில் புகுந்தது தண்ணீர்
திருச்செந்துாரில் 9.1 செ.மீ., மழை ஜி.ஹெச்.,சில் புகுந்தது தண்ணீர்
UPDATED : நவ 26, 2026 10:29 PM
ADDED : நவ 26, 2026 10:23 PM

துாத்துக்குடி:
திருச்செந்துார் பகுதியில், 9.1 செ.மீ., மழை பெய்ததால், பள்ளி, மருத்துவமனையை தண்ணீர் சூழ்ந்தது.
துாத்துக்குடி மாவட்டத்தில், நேற்று (நவ.,25) இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக திருச்செந்துாரில், 9.1 செ.மீ., மழை பதிவாகியது. இதனால், திருச்செந்துார் பகுதிகளில், பள்ளிகளுக்கு இன்று (நவ.,26) விடுமுறை அளிக்கப்பட்டது.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் நாழிக்கிணறுக்கு செல்லும் பிரதான சாலையில், பழைய காவல் நிலையம் எதிரே, முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது.
அந்த பாதை வழியாக, கோவிலுக்கு சென்ற பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இரண்டு ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டன. காயல்பட்டினம் அரசு மருத்துவமனை, திருச்செந்துார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில், அதிகளவு தண்ணீர் சூழ்ந்ததால் யாரும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்ட பிறகே, அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பியது.
