ADDED : அக் 10, 2025 12:28 AM

இரு வி.ஏ.ஓ.,க்களுக்கு 'கம்பி'
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்துாரை சேர்ந்தவர் தங்கராஜா, 38. இவரது மாமனார் சண்முகவேலுக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பெரியூரில் உள்ளது. அந்த நிலப்பட்டாவில் சண்முகவேல் உட்பட வேறு சிலரின் பெயர்கள் உள்ளன.
சண்முகவேல் பெயருக்கு தனிப்பட்டா கேட்டு, ஆன்லைன் மூலம் தங்கராஜா விண்ணப்பித்தார். பெரியூர் வி.ஏ.ஓ., ராஜ்குமார், தங்கராஜாவிடம், 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
தர விரும்பாத தங்கராஜா அளித்த புகாரில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று 10,000 ரூபாயை தங்கராஜாவிடம் பெற்ற ராஜ்குமாரை கையும், களவுமாக பிடித்தனர்.
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த வரிக்கல் கிராமத்தை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன், 33; இவர், தன் தாத்தா தானமாக கொடுத்த நிலத்தை, தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தர, செப்., 26ல் செஞ்சி தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இந்த மனு, வரிக்கல், மேல்அருங்குணம் வி.ஏ.ஓ., தேவராஜ், 45, என்பவரிடம் விசாரணைக்கு வந்தது. அவர், பட்டா பெயர் மாற்றம் செய்ய, 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.
கோகுலகிருஷ்ணன் நேற்று காலை, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் ஆலோசனை படி, தேவராஜிடம் நேற்று கோகுலகிருஷ்ணன், 10,000 ரூபாயை கொடுத்தார். அங்கு மறைந்திருந்த போலீசார் தேவராஜை கைது செய்தனர்.
மின் அதிகாரி சுற்றிவளைப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம், அனந்தவனத்தை சேர்ந்தவர் சிவசுப்ரமணியம், 60; விவசாயி. புதிய வீடு கட்டுவதற்கு, மனைவி பெயரில் தற்காலிக மின் இணைப்பு பெற்றிருந்தார். வீடு கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், தற்காலிக மின் இணைப்பை நிரந்தர இணைப்புக்கு மாற்ற, தாராபுரம் வடக்கு மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
இப்பணிக்கு வணிக ஆய்வாளர் ஜெயகுமார், 56, என்பவர், 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். சிவசுப்ரமணியம் திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரைப்படி, நேற்று காலை சிவசுப்ரமணியம் கொடுத்த பணத்தை ஜெயகுமார் பெற்றபோது போலீசார் அவரை கைது செய்தனர்.