துாத்துக்குடி:முன்விரோதத்தில் கார் டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்டதில், வாலிபர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் தாலுகா உடன்குடி புதுமனை மசூதி தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 45; கார் டிரைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜன் மகன் ராபின்சன், 21, என்பவருக்கும் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த ராபின்சன் அரிவாளால் வெட்டியதில் பாலகிருஷ்ணன் இறந்தார். குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரித்தனர். இதற்கிடையே, போலீசில் ராபின்சன் நேற்று சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார், நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சில மாதங்களுக்கு முன், ராபின்சன் தந்தை ராஜனின் ஆட்டோவில் இருந்த கண்ணாடியை உடைத்தது தொடர்பாக பாலகிருஷ்ணனுக்கும், ராஜனுக்கும் முன்விரோதம் இருந்தது.
அந்த பகை காரணமாக நேற்று முன்தினம் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதால், பாலகிருஷ்ணனை ராபின்சன் அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக போலீசார் கூறினர்.