/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
டயோசீஸ் தேர்தல் மோதல் தி.மு.க., நிர்வாகி கைது
/
டயோசீஸ் தேர்தல் மோதல் தி.மு.க., நிர்வாகி கைது
ADDED : நவ 18, 2025 07:26 AM

துாத்துக்குடி: சி.எஸ்.ஐ., டயோசீஸ் தேர்தல் விரோதம் காரணமாக, வாலிபரை வீடு புகுந்து தாக்கிய தி.மு.க., மாவட்ட துணைச்செயலரை போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., துணைச்செயலராக உள்ள ஜெயக்குமார் ரூபன், 53, துாத்துக்குடி,- நாசரேத் டயோசீஸ் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். கடந்த 9ம் தேதி நடந்த மேலநட்டார்குளத்தில் உள்ள துாய யோவான் சர்ச் பெருமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜெயக்குமார் ரூபன் உட்பட மூவர் ஒரு அணியாக போட்டியிட்டனர்.
ஜெயக்குமார் ரூபன் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், அவரது ஆதரவாளர் சகாயராஜ் தோல்வியடைந்தார். அதற்கு ஜான் ராஜபாண்டியன் தான் காரணம் எனக்கூறி, நவ., 12ம் தேதி அவரது வீட்டிற்குள் புகுந்து ஜெயக்குமார் ரூபன் தகராறு செய்துள்ளார்.
அப்போது, ஜான் ராஜபாண்டியன் மகன் ஹில்டன், 19, என்பவரை தாக்கி உள்ளார். காயமடைந்த ஹில்டன் புகாரில் செய்துங்கநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், ஜெயக்குமார் ரூபனிடம் நேற்று முன்தினம் போலீசார் விசாரணை நடத்த சென்றபோது, அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
தகராறு செய்த அவரை கைது செய்த போலீசார், மருத்துவ பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதற்கிடையே, ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் ஜெயக்குமார் ரூபன் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து, போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

