/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தபால்களை குப்பையில் வீசிய ஊழியர் சிக்கினார்
/
தபால்களை குப்பையில் வீசிய ஊழியர் சிக்கினார்
ADDED : மே 09, 2025 01:15 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கழுகுமலை, காளவாசலில் உள்ள குப்பை கிடங்கில், மே, 2ல் இந்திய அஞ்சல் துறையை சேர்ந்த பதிவு தபால்கள், கடிதங்கள் பாதி எரிந்த நிலையில் கிடந்தன. மக்களுக்கு வினியோகிக்க வேண்டிய தபால்கள், குப்பையில் கிடப்பது குறித்து, அப்பகுதி மக்கள் உடனடியாக அஞ்சல் நிலைய அலுவலர் பால்ராஜப்பாவுக்கு தகவல் கொடுத்தனர்.
கோவில்பட்டி கோட்ட அஞ்சல் அதிகாரிகள், நேரில் விசாரணை நடத்தினர். இது குறித்து கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, போலீசார் விசாரித்தனர்.
இதில், கழுகுமலை அஞ்சல் நிலையத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரியும் முத்தையன்சேர்வை தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், 44, தபால்களை குப்பை கிடங்கில் வீசியது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
தபால் ஊழியர்கள் விடுமுறையில் செல்லும் போது, பாலசுப்பிரமணியன் தற்காலிக தபால்காரராக வேலை பார்த்துள்ளார். அஞ்சல் காப்பீடு திட்டத்தில், அதிக நபர்களை சேர்த்துள்ளார். இதுதொடர்பாக ஏற்பட்ட போட்டியில், உடன் பணிபுரிபவர்களை பழிவாங்கும் நோக்கில், அவர் தபால்களை குப்பையில் வீசியது தெரியவந்துள்ளது.