கப்பல் கட்டும் தளத்திற்கு எதிராக மீனவர்கள் போராட்டம்
கப்பல் கட்டும் தளத்திற்கு எதிராக மீனவர்கள் போராட்டம்
ADDED : செப் 08, 2026 03:47 AM

துாத்துக்குடி: துாத்துக்குடி, முள்ளக்காடு கோவளம் கடற்கரை பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, குடும்பத்தினருடன் கடலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி, மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முள்ளக்காடு கோவளத்தில், 100 குடும்பங்கள் நாட்டுப்படகுகள் மூலம் சிறிய அளவிலான மீன்பிடி தொழில் செய்கின்றன. இந்நிலையில், கப்பல் கட்டும் தளத்திற்காக நிலம் கையகப்படுத்துவதாக வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, மீனவர்கள், உப்பு உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று, மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். குடும்பத்தினருடன் கடலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி, கோஷங்கள் எழுப்பினர். கப்பல் கட்டும் தள திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், தமிழக முதல்வர் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
