கல்லை போட்டு தாயை கொன்ற மனநலம் பாதித்த மகன் கைது
கல்லை போட்டு தாயை கொன்ற மனநலம் பாதித்த மகன் கைது
ADDED : ஆக 21, 2026 11:27 PM
திருச்செந்துார்: ஓய்வு பெற்ற பேராசிரியையான தாய் ரேணுகா, 63, தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த அவரது மகன் தங்கபாலன், 27, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் தாலுகா, குமாரபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் அன்புமணி. இவரது மனைவி ரேணுகா. அரசு உதவி பெறும் கல்லுாரியின் ஓய்வு பெற்ற பேராசிரியை. இவரது மகன் தங்கபாலன், சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ரேணுகாவும், தங்கபாலனும் நேற்று வீட்டில் இருந்தபோது, திடீரென கோபமடைந்த தங்கபாலன், அம்மி கல்லை தலையில் போட்டு, தாயை கொலை செய்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ரேணுகாவின் சடலம் அருகிலேயே தங்கபாலன் அமர்ந்துள்ளார்.
திருச்செந்துார் போலீசார், ரேணுகா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தங்கபாலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
