/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடி மாவட்டத்தில் கனமழை தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி
/
துாத்துக்குடி மாவட்டத்தில் கனமழை தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி
துாத்துக்குடி மாவட்டத்தில் கனமழை தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி
துாத்துக்குடி மாவட்டத்தில் கனமழை தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி
ADDED : நவ 25, 2025 05:48 AM

துாத்துக்குடி: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், துாத்துக்குடி மாவட்டத்தில், பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் நேற்று இரவு வரை சராசரியாக 6.6 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 9.4 செ.மீ., மழை பதிவாகியது. மாவட்டத்தில் மூன்று வீடுகள் இடிந்து சேதமடைந்தது. மின்சாரம் தாக்கி பழனியாண்டி, 71, என்ற காவலாளி உயிரிழந்தார்.
மாவட்டத்தின் முதல் அணையான மருதுார் அணையில் இருந்து வினாடிக்கு, 32,000 கன அடி தண்ணீரும், ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து, 28,000 கன அடி தண்ணீரும் வெளியேறி வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, துாத்துக்குடி நகரில் ஆதிபராசக்தி நகர், அம்பேத்கர் நகர், தபால் தந்தி காலனி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
வி.இ., சாலையில் அமைந்துள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் சி.வ., அரசு மேல்நிலைப் பள்ளி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், ஆர்.எஸ்.ஏ., மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் அலுவலகம் ஆகியவை உள்ளன.
வளாகம் முழுதும் தண்ணீர் குளம்போல தேங்கியுள்ளதால், கல்வித்துறையில் பணி புரியும் ஊழியர்கள் மழை நீருக்குள் அச்சத்துடன் நடந்தபடியே அலுவலகத்திற்கு சென்றனர்.
துாத்துக்குடி நகரம் மட்டுமின்றி, மாவட்டம் முழுதும் பலத்த மழை பெய்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் பஸ் நிலையம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
தொடர் மழையால் பஸ் நிலைய மேற்பகுதி முழுதும் நனைந்து இருந்த நிலையில், நேற்று காலையில், திடீரென ஒரு பகுதியில் மேற்கூரை இடிந்து விழுந்தது. அங்கிருந்த பயணியர் அலறி அடித்து ஓடினர். எனினும், யாருக்கும் காயமில்லை.
திருச்செந்துார் அரசு போக்குவரத்து பணிமனையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

