/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
சிறையில் இருந்து தப்பிய கைதி மீண்டும் சிக்கினார்
/
சிறையில் இருந்து தப்பிய கைதி மீண்டும் சிக்கினார்
ADDED : மார் 06, 2026 11:07 PM
துாத்துக்குடி :கிளை சிறையில் இருந்து தப்பிய கைதியை, சிறைக்காவலர்கள் காத்திருந்து பிடித்து, மீண்டும் சிறையில் அடைத்தனர்.
துாத்துக்குடி, மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் நிரஞ்சன், 18. இவர், அடிதடி வழக்கில், பிப்., 12ம் தேதி கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, திடீரென சிறையிலிருந்து தப்பியோடினார். இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு முதல், விடிய விடிய நிரஞ்சன் வீடு அமைந்துள்ள மாப்பிள்ளையூரணி பகுதியில், சிறைக்காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அதிகாலை, 5:00 மணிக்கு வீட்டிற்குள் நுழைந்தபோது, அங்கு காத்திருந்த சிறைக்காவலர்கள், அவரை மடக்கி பிடித்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். கிளை சிறையில் இருந்து தப்பியோடிய கைதி ஒருவரை, சிறைக்காவலர்களே, போலீசார் உதவி இன்றி, மீண்டும் பிடித்து சிறையில் அடைத்த சம்பவம் பாராட்டப்படுகிறது.

