/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
மணப்பாடு திருச்சிலுவை திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் : 14ம் தேதி மகிமைப்பெருவிழா
/
மணப்பாடு திருச்சிலுவை திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் : 14ம் தேதி மகிமைப்பெருவிழா
மணப்பாடு திருச்சிலுவை திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் : 14ம் தேதி மகிமைப்பெருவிழா
மணப்பாடு திருச்சிலுவை திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் : 14ம் தேதி மகிமைப்பெருவிழா
ADDED : செப் 05, 2011 12:24 AM
உடன்குடி : மணப்பாடு திருச்சிலுவை திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
வரும் 14ம் தேதி மகிமைப் பெருவிழா நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு திருச்சிலுவை ஆலயம் தென் பகுதியில் மிகவும் பிரசித்திப்பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும். மணல்குன்றின் மீது மூன்று பக்கம் கடல் சூழ இயற்கை எழில் மிகுந்த இடத்தில் இத்திருத்தலம் உள்ளது. குறிப்பாக ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட சிலுவையின் ஒரு சிறிய பகுதி இத்திருத்தலத்தில் இருப்பது தனிச்சிறப்பாகும். கிறிஸ்தவ பெரியவர்களால் சின்ன எருசலேம் என அழைக்கப்படும். இந்த ஆலயத்தின் 432ம் ஆண்டு திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று (4ம் தேதி) நடந்தது. இதனையொட்டி அதிகாலை பங்கு ஆலயத்தில் திருப்பலி நடந்தது. காலையில் பங்கு ஆலயத்தில் இருந்து கொடி பவனியும் அதனைத் தொடர்ந்து மறைமாவட்ட முதன்மை குரு ஆண்ட்ரூ டிரோஸ் தலைமையில் திருச்சிலுவை ஆசீர் ஆகியவை நடந்தது. இதில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவ மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 4ம் தேதி முதல் 12ம் தேதி வரை தினசரி காலை 5.30 மணிக்கு பங்கு ஆலயத்திலும் திருத்தலத்திலும் திருப்பலிகள், காலை 6.30 மணிக்கு திருத்தலத்தில் நவநாள் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் செபமாலை மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. வரும் 13ம் தேதி திருப்பலிக்குப் பின் ஐந்து திருக்காய சபையின் பொறுப்பாளர்கள் தேர்வும், மாலை 4.30 மணிக்கு ஆலயத்தில் மலையாளத்தில் திருப்பலியும், மாலை 6 மணிக்கு திருத்தலத்திற்கு ஐந்து திருக்காய சபையினர் பவனியும், மாலை 6.30 மணிக்கு ஆயர் இவோன் அம்புரோஸ்க்கு திருத்தல மேடையில் வரவேற்பும், மாலை 7 மணிக்கு திருநாள் மாலை ஆராதனை நடக்கிறது. இந்த ஆராதனையில் கேரளா, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் குடும்பத்துடன் கலந்து கொள்வார்கள். கேரளாவில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொள்வதால் மலையாளத்திலும் ஆராதனை நடக்கும். இரவு 8.30 மணிக்கு புனித யாகப்பர் ஆலயத்திலிருந்து ஊரின் வீதிகள் வழியே மெய்யான திருச்சிலுவை பவனி நடக்கிறது. வரும் 14ம் தேதி திருச்சிலுவை மகிமைப் பெருவிழாவையொட்டி காலை 4 மணிக்கு பங்கு ஆலயத்திலும், திருச்சிலுவை ஆலயத்திலும் திருப்பலிகள், காலை 5 மணிக்கு திருச்சிலுவை ஆலயத்தில் மலையாளத்தில் திருப்பலியும், காலை 6 மணிக்கு திருத்தலத்திற்கு ஐந்து திருக்காய சபையினர் பவனியும், ஆயர் தலைமையில் கூட்டுத் திருப்பலியும், ஐந்து திருக்காய சபை பொறுப்பாளர் நியமனமும், மாலை 4.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் நற்கருணை ஆசீர், மெய்யான திருச்சிலுவை முத்தம் செய்தல், மாலை 5.30 மணிக்கு கொடியிறக்கம் திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலியும் நடக்கிறது. வரும் 15ம் தேதி தூய வியாகுல அன்னை திருநாளை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு பங்கு ஆலயத்திலும், மாலை 6.30 மணிக்கு திருச்சிலுவை ஆலயத்திலும் திருப்பணி நடக்கும். ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள் தெயோபிலஸ், கிளைட்டன் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.