/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
தொழிலாளியை கொன்ற இருவருக்கு மாவுக்கட்டு
/
தொழிலாளியை கொன்ற இருவருக்கு மாவுக்கட்டு
ADDED : பிப் 08, 2025 12:56 AM

துாத்துக்குடி:கட்டட தொழிலாளியை கொலை செய்த இருவருக்கு, கழிப்பறையில் வழுக்கி விழுந்ததால் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், அமுதுண்ணாகுடியைச் சேர்ந்தவர் சந்துரு, 21; கட்டட தொழிலாளி. இவர், தச்சமொழியைச் சேர்ந்த சுபசெலீனா, 19, என்ற பெண்ணை காதலித்து கடந்தாண்டு ஜூலையில் திருமணம் செய்தார்.
சில மாதங்கள் மட்டுமே அவருடன் இருந்த சுபசெலீனா, சென்னை சென்றார். அங்கு, சாத்தான்குளத்தைச் சேர்ந்த கிங்ஸ்டன் ஜெய்சிங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக இருந்த போட்டோவை அவர், 'வாட்ஸாப் ஸ்டேட்டஸ்' வைத்துள்ளார்.
இது தொடர்பாக, சந்துருவுக்கும், கிங்ஸ்டன் ஜெய்சிங்கிற்கும் தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம், சந்துருவை பின்தொடர்ந்த கிங்ஸ்டன் ஜெய்சிங், அவரது நண்பர்கள் நான்கு பேர், சந்துருவை வெட்டிக்கொலை செய்தனர்.
சாத்தான்குளம் போலீசார், கிங்ஸ்டன் ஜெய்சிங், 24, மகாராஜா, 24, லிங்கதுரை, 18, மற்றும் 17 வயது சிறார் இருவர் என, ஐந்து பேரை நேற்று கைது செய்தனர்.
அவர்களில், கிங்ஸ்டன் ஜெய்சிங், மகாராஜா ஆகியோர் கழிப்பறைக்கு சென்றபோது வழுக்கி விழுந்து, கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. கிங்ஸ்டன் ஜெய்சிங் மீது இரு கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.