/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
காட்டாற்று வெள்ளம்: சாலை துண்டிப்பு
/
காட்டாற்று வெள்ளம்: சாலை துண்டிப்பு
ADDED : அக் 23, 2024 06:56 AM

ஊத்தங்கரை : திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலையில் கனமழை காரணமாக மாம்பாக்கம், சிம்மனபுதுார் அருகே உள்ள ஓட்டேரி அணை நிரம்பி உபரி நீர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை எல்லை பகுதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.
நேற்று அதிகாலை திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தால் ஊத்தங்கரை அடுத்த எக்கூர், ஆண்டியூர், மகனுார்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் வயல் வெளிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
மகனுார்பட்டியில் மேம்பாலம் பணி நடந்து வருவதால், தற்காலிக சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து இயங்கி வந்தது. ஆனால், அதிகாலை ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில், தற்காலிக சாலை அடித்துச் செல்லப்பட்டதால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்துார் - -சிங்காரப்பேட்டை பிரதான சாலை முழுதுமாக துண்டிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது:
திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலையில் அதிக நீர்வரத்து காரணமாக வரும் உபரி நீர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை அருகே உள்ள எக்கூர், ஆண்டியூர், மகனுார்பட்டியில் உள்ள நீர்வரத்து கால்வாய்கள் மூலமாக, அந்தந்த பகுதி ஏரிகளுக்கு சென்று உபரி நீர் பாம்பாறு அணையில் கலக்கிறது.
உபரி நீர் விவசாய நிலங்களில் உள்புகுந்து பயிர் நாசமாகிறது. எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுத்து, நீர் வரத்து கால்வாய்களின் கரைகளை பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு கூறினர்.