/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆசிரியர்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வு மிக முக்கியம் : சுகிசிவம் அறிவுறுத்தல்
/
ஆசிரியர்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வு மிக முக்கியம் : சுகிசிவம் அறிவுறுத்தல்
ஆசிரியர்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வு மிக முக்கியம் : சுகிசிவம் அறிவுறுத்தல்
ஆசிரியர்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வு மிக முக்கியம் : சுகிசிவம் அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 17, 2011 01:19 AM
திருப்பூர் : ஆசிரியர்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வு மிக முக்கியம்; அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஆசிரியர்களிடம் படிப்பது மாணவர்களுக்கு சுகம் என, சொற்பொழிவாளர் சுகிசிவம் பேசினார்.வாழ்வியல் பயிலரங்க அமைப்பு மையம் சார்பில் பள்ளி முதல்வர், ஆசிரியர்களுக்கான பண்பு பயிற்சி விழிப்புணர்வு முகாம் வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
சொற்பொழிவாளர் சுகிசுவம் 'ஆசிரியர்களுக்கான பண்புகள்' குறித்து பேசியதாவது:நன்றாக படிக்கும் மாணவனை தேர்ச்சி பெற வைப்பது ஆசிரியர் பணியல்ல. பலவீனம், குறைகள், குறைபாடு உள்ள மாணவர்கள்தான் ஆசிரியர் பணிக்கான மூலதனம்; அவர்களை வெற்றியடைய செய்வதில் ஆசிரியர் வெற்றி பெறுகிறார்.ஆசிரியர் எதிர்பார்க்கும் அளவுக்கு மாணவர்கள் இருக்கமாட்டார்கள். நன்றாக பயின்று படிப்பை முதன்மைபடுத்தி வாழ்வில் முன்னேறும் மாணவர்கள் ஒரு விதம். அதேபோல், நன்றாக படிக்காத மாணவர்கள் தோற்றுப்போவார்கள் என்பது தவறான கண்ணோட்டம். கல்வி என்பது பொதுவான வழியில், அனைவரும் மேலே வருவதற்கான ஒரு வழி. ஆனால் அதில் சில விதிவிலக்குகளும் உண்டு.
ஒவ்வொரு மாணவரிடத்தும் ஒரு தனித்துவம் ஒளிந்திருக்கும். ஒரு மாணவன் எதை வைத்து, எதை முன்னிலைப்
படுத்தி வாழ்வில் வெற்றிப்பெற போகிறான் என்பதை ஆசிரியர்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதை மறைமுகமாக வளரச்செய்து, அவன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறார்களோ அவரே சிறந்த ஆசிரியர்.ஒரு ஆசிரியர் மாணவனின் படிப்பு, ஒழுக்கம் ஆகியவற்றுக்கு முக்கியத் துவம் அளிப்பதுடன், திறன்களை அணையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பயிற்றுவிப்பில் ஈடுபடும் ஆசிரியர் வேலை என்பது பணியோ, தொழிலோ, சேவையோ கிடையாது. மாதா, பிதா, தெய்வம் எப்படி ஒரு உறவோ, அதேபோல் மாணவருக்கும், ஆசிரியருக்கும் இடையில் உள்ள உன்னத உறவு.ஆசிரியர் பணிக்கான மேன்மையை உள்வாங்கிக்கொண்டு அதில் ஈடுபட வேண்டும். அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஆசிரியரிடம் படிப்பது சுகம். இடைக்கால ஏற்பாடாக ஆசிரியர் தொழிலில் நுழைந்தவரிடம் படிப்பது பாவம்.
ஆசிரியர்கள் அதிகம் படிக்க வேண்டும்; தொழில்நுட்ப வளர்ச்சியால் மாணவர்கள் அதிகம் கற்றுக்கொள்கின்றனர். அவர்களது சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ஆசிரியரின் திறன் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
குழந்தைகள் கற்றுக்கொள்ள விரும்புகின்றனர்; ஆனால் யாரும் கற்பிப்பதை விரும்புவதில்லை.ஒவ்வொரு மாணவனின் மன ஆழத்தில் உறங்குகிற மாணவத் தன்மையை எழுப்புவது எளிதல்ல.இவ்வாறு சுகிசுவம் பேசினார்.
நிகழ்ச்சியில் பேராசிரியர் சந்திரசேகர தேவ், 'வெற்றி பெற்ற மாணவர்களை உருவாக்கிட' என்ற தலைப்பில் பேசினார்.
வாழ்வியல் பயில ரங்க அமைப்பு மைய அமைப்பாளர் ராமகிருஷ்ணன், பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.