ADDED : ஜன 15, 2024 12:39 AM

பல்லடம்:பனியன் தொழில் சார்ந்த திருப்பூர் மாவட்டம், தொழிலாளர்களுக்கு அடைக்கலமாக இருந்து வருகிறது. வெளி மாவட்ட தொழிலாளர்கள் பலர் இங்கு பணிபுரிகின்றனர்.
விசைத்தறி, கறிக்கோழி உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த பல்லடம் வட்டாரத்திலும், தென் மாவட்ட தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை பார்க்கின்றனர். தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளின் போது, சொந்த ஊர் செல்வதை தொழிலாளர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதன்படி, பொங்கல் திருநாள் தென் மாவட்ட தொழிலாளர்களுக்கு முக்கிய பண்டிகையாக உள்ளது. இந்நாளில், சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்கள்,
உற்றார், உறவினர்களுடன் பண்டிகையை முழுமையாக கொண்டாடிய பின்பே ஊருக்கு திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பண்டிகை நாட்களில், பஸ்கள் மூலம் சென்று வந்த தொழிலாளர்கள் பலர், சமீப நாட்களாக, வாடகை வாகனங்கள் மற்றும் டூவீலர்கள் மூலமும் சொந்த ஊருக்கு செல்வது அதிகரித்துள்ளது.
பண்டிகை நாட்களில் பஸ்களில் அதிகப்படியான கூட்ட நெரிசல் ஏற்படுவதன் காரணமாக, குடும்பத்துடன் ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். கூடுதல் கட்டணம் செலுத்தி ஆம்னி பஸ்களில் செல்வதும் தொழிலாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு, சிரமப்பட்டு நெரிசலில் சிக்கி பஸ்களில் செல்வதை காட்டிலும், குடும்பத்துடன், டூவீலர்களிலேயே சொந்த ஊர் செல்வதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தேவையான இடங்களில் நின்று ஓய்வெடுத்துச் செல்வதுடன், குடும்பத்துடன் செல்வதால் பஸ் கட்டணத்தை காட்டிலும் செலவு குறைவாகவே ஆகும் என்றும் கருதுகின்றனர்.
இன்ப சுற்றுலா
திருப்பூரில் உள்ள பனியன் தொழிலாளர், தீபாவளி பண்டிகையை போனசுடன் கொண்டாடுகின்றனர். அதேபோல், உற்சாகம் குறையாமல் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்தாண்டு, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, தொடர்ச்சி ஐந்து நாட்களும், மற்றவர்களுக்கு, நான்கு நாட்களும் விடுமுறை கிடைத்துள்ளது.
காப்புக்கட்டிவிட்டு, இன்று அதிகாலையில் பொங்கல் வைத்து, பட்சணங்களுடன் பண்டிகையை கொண்டாட உள்ளனர். அதனை தொடர்ந்து, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சகிதமாக, இன்ப சுற்றுலா செல்லவும் திட்டமிட்டுள்ளனர். தொடர் விடுமுறையை, உற்சாகமாக கொண்டாட, முழு அளவில் நேற்றே தயாராகிவிட்டனர்.