ADDED : ஜூன் 08, 2026 05:11 AM
திருப்பூர்:'திருப்பூர்
மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை உரிய காலத்தில் முடித்து
மக்கள் பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும்; அதற்கு அனைத்துத் துறை
அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்' என மாவட்டப் பொறுப்பு
அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையிலான
தமிழக அரசு, மாவட்ட வாரியாக வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்யப் பொறுப்பு
அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்திற்கான
முதல் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
அமைச்சர் தாமதம்
ஞாயிறு
விடுமுறை தினமாக இருந்தாலும், காலை 10:00 மணிக்கு அறிவிக்கப்பட்ட
கூட்டத்திற்காக அதிகாரிகள் 9:40 மணிக்கே வந்திருந்தனர். அமைச்சர்
வருகை தாமதமானதால், 11:30-க்குத் தொடங்கி மதியம் 1:30 மணி வரை இரண்டு
மணி நேரம் ஆய்வு நடந்தது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கமலி, எம்.பி.
சுப்பராயன், எம்.எல்.ஏ.க்கள் சத்தியபாமா, பாலமுருகன், ராம்குமார்,
நடராஜ், மாநகராட்சி கமிஷனர் அமித் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஞாயிற்றுக்கிழமை
ஆய்வுக் கூட்டம் நடத்தியதற்குத் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அமைச்சர் செங்கோட்டையன், 'மாவட்டப்
பொறுப்பு அமைச்சர் கர்நாடகா சென்றுவிட்டு நேற்றுதான் திரும்பினார்.
அந்த அவசரக் காரணத்தினாலேயே விடுமுறை நாளில் கூட்டம் நடத்த
வேண்டியதாயிற்று. இனிமேல் இதுபோன்று நிகழாது' என்றார்.
