ADDED : மே 20, 2024 01:34 AM

திருப்பூர்;திருப்பூரில் நேற்று பெய்த கனமழை, 'அக்னி'யை அணைத்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. வீடுகள் மற்றும் பின்னலாடை நிறுவனங்களை மழைநீர் சூழ்ந்தது.
திருப்பூரில் கடந்த பிப்., மாத இறுதியில் துவங்கி கடும் வெயில் கொளுத்தியது; 107 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது; மக்கள் சிரமப்பட்டனர். தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
அக்னி நட்சத்திரம் துவங்கிய நாள் முதல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்யத் துவங்கியது. திருப்பூர் மாவட்டத்திலும் கடந்த வாரத்தில் சில நாட்கள் ஓரளவு நல்ல மழை பெய்தது. கடந்த ஒரு வாரமாக வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.
மாவட்டத்தில் பல பகுதிகளில் கடந்த இரு நாட்கள் ஆங்காங்கே சிறிதளவு மழை பெய்தது. இருப்பினும் திருப்பூர் நகரப் பகுதியில் இந்த இரு நாட்களும் மழை எட்டிப் பார்க்கவில்லை.
நேற்று காலை முதலே திருப்பூரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4:00 மணியளவில் லேசான துாறல் விழத்துவங்கியது.
இந்த துாறல் 5:00 மணிக்கு மேல் கன மழையாக மாறியது. ஏறத்தாழ ஒரு மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்தது. இதனால், அனைத்து ரோடுகளிலும் மழை நீர் பெருமளவு வழிந்தோடியது. வடிகால்கள், ஓடை மற்றும் நொய்யல் ஆற்றில் இந்த மழைநீர் பெருக்கெடுத்தது.
திடீர் மழை காரணமாக பாதசாரிகள் இரு சக்கர வாகனங்களில் சென்றோர் மழைக்கு ஒதுங்கி நின்றனர். ரோட்டோர பள்ளங்கள், குழிகளில் மழைநீர் தேங்கியது.
மழைநீர் புகுந்தது
வாலிபாளையம் சடையப்பன் கோவில் வீதி, ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு பகுதிகளில் வழிந்தோடிய மழை நீர் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். ரயில்வே சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்கி நின்றது. பிரிட்ஜ்வே காலனியில் ஒரு கோன் வைண்டிங் நிறுவனத்தில் மழைநீர் புகுந்தது. இதேபோல், பல்வேறு இடங்களில் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மழைநீர் புகுந்தன.
மின் வினியோகம் பாதிப்பு
கொங்கு மெயின் ரோடு, வ.உ.சி., நகர், கோல்டன் நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
அடைப்பெடுத்தகவுன்சிலர் கணவர்
திருமுருகன்பூண்டி சுற்றுப்பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. நகராட்சி, 23வது வார்டுக்கு உட்பட்ட வீதியில் உள்ள வடிகால்களில் மழை நீர் சென்று பாய்ந்தது.
அதில் குப்பைக் கழிவுகள் தேங்கி நின்றதால், கழிவு நீருடன் மழைநீர் கலந்து ரோட்டில் பாயத் துவங்கியது. தகவல் அறிந்து வார்டு கவுன்சிலர் பூங்கோதையின் கணவர் ராமச்சந்திரன், வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வடிகாலுக்குள் இறங்கினார். சாக்கடை கால்வாயில் அடைத்துக் கிடந்த கழிவுகளை அகற்றி, மழைநீர் செல்ல வழி ஏற்படுத்தினார்.
உடைந்தது குட்டை
சூழ்ந்தது வெள்ளம்
நேற்று மாலை மேற்குபதி மற்றும் சுற்றுப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மேற்குபதி ஊராட்சி, முட்டிக்காளான்பகுதியில் உள்ள குட்டையில் தண்ணீர் வந்து சேர்ந்தது. பெருமளவு தண்ணீர் சேர்ந்த நிலையில் இந்த குட்டையின் கரை உடைப்பெடுத்தது. குட்டையில் இருந்த தண்ணீர் வெளியேறி, மழை நீருடன் அப்பகுதியில் தாழ்வான பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடியது. அங்குள்ள 15 வீடுகள் மற்றும் பள்ளியை மழைநீர் சூழ்ந்தது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையில்,அங்கு வசிப்போர் உள்ளனர்.
