/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
109 டிகிரி பாரன்ஹீட் கொளுத்தும் வானிலை எச்சரிக்கை
/
109 டிகிரி பாரன்ஹீட் கொளுத்தும் வானிலை எச்சரிக்கை
ADDED : ஏப் 25, 2024 11:36 PM
உடுமலை;திருப்பூர் மாவட்டத்தில்வெப்பநிலை 109 டிகிரி பாரன்ஹீட் வரை உயரும் வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 'இந்தியாவின் அதிவெப்ப நகரங்களின் வரிசையில், ஈரோடு இரண்டாம் இடம் பிடித்த நிலையில், அங்கு நிலவிய வெப்பநிலையை இந்த வாரம், திருப்பூரில் உணர முடியும்' என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
கோடை வெயிலின் உக்கிரம் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில், வரலாறு காணாத வெயில் நிலவுகிறது.
அருகேயுள்ள ஈரோடு மாவட்டத்தில், 109 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது; இது, 'இந்திய அளவில், அதிவெப்பம் நிலவும் நகரங்களின் வரிசையில், 2வது இடம்' என தெரிவிக்கப்பட்டது; அந்தளவு வெயிலின் உக்கிரம் உள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வாராந்திர வானிலை அறிக்கையில், ''திருப்பூர் மாவட்டத்தில், வரும், 28ம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை, 41 முதல், 43 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். (அதாவது, 105.8 டிகிரி பாரன்ஹீட் முதல், 109.4 டிகிரி பாரன்ஹீட்) என, கூறப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, நாட்டின் அதி வெப்ப நகரங்களின் பட்டியலில் திருப்பூரும் இணையும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த வாரம், 36 முதல், 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது, குறிப்பிடத்தக்கது.
திருப்பூரில், குறைந்தபட்ச வெப்பநிலை, 27 முதல், 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். காற்றின் ஈரப்பதம், 70 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம், 20 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது.
மணிக்கு, 8 முதல், 12 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மதிய நேரங்களில், 12:00 முதல், 3:00 மணி வரை அதிக வெயில் எதிர்பார்க்கப்படுவதால், இயன்றவரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். கால்நடைகளை மாலை, 4:00 மணிக்கு மேல் மேய்ச்சலுக்கு விடுவது நல்லது.
இவ்வாறு, வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

