/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
10ம் வகுப்பு பொதுத்தேர்வு; தயாராகும் கல்வித்துறை
/
10ம் வகுப்பு பொதுத்தேர்வு; தயாராகும் கல்வித்துறை
ADDED : மார் 15, 2025 12:30 AM

திருப்பூர்; பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் சுறுசுறுப்பாகியுள்ளது. தேர்வு மையம் இறுதி செய்யப்பட்டு, தேர்வு பணியில் ஈடுபடும் கண்காணிப்பாளர், அலுவலர்களுக்கான பணிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும், 28ல் துவங்கி, ஏப்., 15ம் தேதி வரை நடக்கிறது.
தேர்வுக்கு இன்னும் இரண்டு வாரமே மட்டுமே உள்ள நிலையில், 10ம் பொதுத்தேர்வுக்கான ஏற்பாட்டு பணிகளில் மாவட்ட கல்வித்துறை சுறுசுறுப்பாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 348 பள்ளிகளில் பயிலும், 15 ஆயிரத்து, 87 ஆயிரம் மாணவர்கள், 15 ஆயிரத்து, 148 மாணவியர் என, 30 ஆயிரத்து, 235 பேர் தேர்வெழுதுகின்றனர். தனித்தேர்வர்களாக, 1,097 பேர் தேர்வெழுத உள்ளனர். மாவட்டம் முழுதும், ஒன்பது தாலுகாவில், 108 மையங்களில் தேர்வுகள் நடக்கவுள்ளது. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில், தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் எடுத்துச் செல்வது, தேர்வு பணியில் ஈடுபட உள்ள முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், அறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 1,780 அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட கல்வி அலுவலர் தலைமையிலான, 170 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை தேர்வு நாளில் பரிசோதனையில் ஈடுபட, நியமிக்கப்பட்டுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு, 25ம் தேதியும், பிளஸ் 1 தேர்வு, 27ம் தேதியும் முடிகிறது. அதன்பின், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு (வரும், 28ல்) துவங்க உள்ளது.
ஹால் டிக்கெட் வெளியீடு
இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் நேற்று மதியம் தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) வெளியிடப்பட்டது.
படிக்கும் பள்ளியே தேர்வு மையம் இருப்பவருக்கும் தேர்வு நாளிலும், வேறு பள்ளிக்கு சென்று தேர்வு எழுதுவோருக்கு, ஒரு நாள் முன்னதாகவும், ஹால் டிக்கெட் ஒப்படைக்கப்பட உள்ளது. தனித்தேர்வர்களுக்கு ஏற்கனவே ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டு விட்டது.